சுங்கை பட்டாணி, மார்ச் 2 :
இங்குள்ள ஒரு இடைநிலைப் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர், இன்று பள்ளி கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருந்து விழுந்ததில் பலத்த காயமடைந்துள்ளார்.
சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையின் (HSAH) அவசர சிகிச்சைப் பிரிவினர், 17 வயதுடைய மாணவர் ஒருவர் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்ததாக, கோலா மூடா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஹன்யான் ராம்லான் (ACP Hanyan Ramlan) கூறினார்.
இது குறித்து அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையின்படி, இன்று காலை 8 மணி முதல் 9 மணிக்குள் மாணவர் பள்ளி நிர்வாகக் கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருந்து விழுந்துள்ளார். அப்போது மாணவர்கள் அனைவரும் பள்ளியின் முக்கிய மண்டபத்தில் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் (morning assembly) கலந்துகொண்டிருந்தனர். அந்த மாணவர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.”
பாதிக்கப்பட்ட மாணவர் ஆட்டிசம் (autism) பாதிப்பு கொண்டவர் என்று நம்பப்படுகிறது. இந்த விபத்தில் அவருக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
மேலும் “பள்ளியின் இரண்டு சிசிடிவி (CCTV) காட்சிகளை நாங்கள் பெற்றுள்ளோம். அவை சம்பவத்தை முழுமையாகப் பதிவு செய்யவில்லை என்றாலும், விசாரணையில் உதவியாக உள்ளன. பள்ளியில் வகுப்புகள் முடிந்ததால் மாணவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமிருந்து வாக்குமூலம் பெற நாங்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்,” என்று அவர் தெரிவித்தார்.





















