கோலாலம்பூர் | மார்ச் 03, 2026:
மத்திய கிழக்கில் நிலவிய வான்வெளி மூடல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஜெட்டா மற்றும் மதினா நகரங்களுக்கான விமானச் சேவைகளை, மார்ச் 4 முதல் மார்ச் 8 வரை மீண்டும் இயக்கவுள்ளதாக மலேசியா ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
மலேசியா ஏவியேஷன் குரூப் (MAG) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கோலாலம்பூர் மற்றும் ஜெட்டா இடையிலான MH156 மற்றும் MH157 விமானங்கள் மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இயங்கும். மேலும், மார்ச் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கூடுதல் சேவைகள் வழங்கப்படும்.
மேலும் மதினாவிற்கான சேவைகள் மார்ச் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் செயல்படும் என்றும், இப்பகுதியின் நிலவரத்தை இன்னும் கண்காணித்து வருவதால், தோஹாவிற்கான விமானங்கள் மார்ச் 7 வரை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் அது தெரிவித்துள்ளது.
இந்நிலையில் லண்டன் மற்றும் பாரிஸ் ஆகிய இரு நகரங்களுக்கான விமானங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. எனினும், இவை மோதல் நடக்கும் வான்வெளிப் பகுதிகளைத் தவிர்த்து மாற்றுப் பாதைகளில் இயக்கப்படுகின்றன.
மார்ச் 8-ஆம் தேதிக்குப் பிறகான சேவைகள் நிலவரத்தைப் பொறுத்து மறுஆய்வு செய்யப்படும். தேவைப்பட்டால் பயண அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்படலாம்.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பயணிகள் தங்களின் சமீபத்திய பயணத் தகவல்களைப் பெற, இணையதளத்தில் உள்ள “My Booking” போர்டல் மூலம் தொடர்பு விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் மாற்றுப் பயண ஏற்பாடுகள் தேவைப்படும் பயணிகளுக்கு விமான நிறுவனம் உதவி வழங்கி வருகிறது என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.





















