பிலிப்பைன்ஸ் ஹெலிகாப்டர் விபத்து: மலேசியர் உட்பட இருவர் பலி; மூவர் படுகாயம்!

மணிலா | மார்ச் 04, 2026:

பிலிப்பைன்ஸ் நாட்டின் ரிசால் (Rizal) மாகாணத்தில் நேற்று காலை நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் மலேசியர் ஒருவர் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் என இருவர் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு தென்கிழக்கே இரண்டு மணிநேர பயணத் தொலைவில் உள்ள பிலில்லா (Pililla) என்ற சிறிய நகரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) காலை 7:27 மணியளவில், குடியிருப்புப் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு புல்வெளிப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.

இந்த ஹெலிகாப்டரில் இரண்டு மலேசியர்கள் உட்பட மொத்தம் ஐந்து பேர் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் விபத்தில் சிக்கியவர்களில் ஒரு மலேசியர் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் சிக்கிய மூவர் உயிர் தப்பினர். இதில் ஹெலிகாப்டர் ஓட்டுநர் (Pilot) மிக மோசமான நிலையில் காயமடைந்துள்ளார். மற்ற இருவர் அதிர்ச்சியில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கோரிக்கையின்படி, அவர்கள் மணிலாவில் உள்ள உயர்தர மருத்துவமனைக்கு (Tertiary Hospital) மாற்றப்பட்டுள்ளனர் என்று, பிலில்லா நகர மேயர் ஜான் மாசின்சின் கூறினார்.

இன்ஜின் பழுதடைந்து ஹெலிகாப்டர் கீழே விழத் தொடங்கியபோது, குடியிருப்புப் பகுதியில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு ஒரு காலி இடத்தில் தரையிறக்க முயன்ற பைலட்டின் செயலை மேயர் பாராட்டினார்.

முதற்கட்ட விசாரணையில், ஹெலிகாப்டரின் இன்ஜின் திடீரென செயலிழந்ததால் (Engine shut down) அவசரமாகத் தரையிறக்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக ரிசால் மாகாண காவல்துறை அதிகாரி ரம்ஜே பாங்கா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here