ஆழ்கடலில் தத்தளித்த ஈரானிய போர்க்கப்பலின் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் காப்பாற்றிய இலங்கை, தற்போது எதிர்பாராத சர்வதேச அரசியல் கவனத்தை எதிர்கொண்டு வருகிறது.
மீட்கப்பட்ட மாலுமிகளை ஈரானுக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக உலக வல்லரசுகளான அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் (Reuters) வெளியிட்ட தகவலின்படி, ஈரான் தனது மாலுமிகளை உடனடியாக ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், மறுபுறம் அவர்களை ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சில சர்வதேச தகவல்களின் படி, மீட்கப்பட்ட மாலுமிகள் ஈரானுக்கு திரும்பினால் அவர்கள் அமெரிக்காவுக்கு எதிரான பிரச்சாரங்களில் பயன்படுத்தப்படக்கூடும் என்ற கவலை அமெரிக்க தரப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்கள் வெளியாகவில்லை என்றும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,
“மீட்கப்பட்ட மாலுமிகளை திருப்பி அனுப்புவது தொடர்பாக சர்வதேச கடல்சார் சட்டங்களையும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் வழிகாட்டுதல்களையும் ஆய்வு செய்து வருகிறோம். விசாரணைக்குப் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மற்றும் பொருளாதார உறவுகளால் ஈரானுடனும், சர்வதேச ஆதரவு மற்றும் கடன் உதவிகளால் அமெரிக்காவுடனும் உறவை பேணி வரும் இலங்கை, இந்த இரு வல்லரசுகளுக்கும் இடையில் தனது நடுநிலையை எவ்வாறு காக்கப்போகிறது என்பது தற்போது முக்கியமான ராஜதந்திர சவாலாக மாறியுள்ளது.
இந்த நெருக்கடியை இலங்கை அதிபர் அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகிறது என்பதை சர்வதேச சமூகம் ஆர்வத்துடன் கவனித்து வருகிறது.




















