டாக்கா, மார்ச் 9:
உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வங்கதேசம் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஏற்பட்டுள்ள கடும் மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க வங்கதேச அரசு இந்த அவசர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், ஆங்கிலப் பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் திங்கட்கிழமை முதல் மூடப்பட வேண்டும் என கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ரமலான் பெருநாளுக்கான (ஈகைத் திருநாள்) விடுமுறையை பல்கலைக்கழகங்கள் முன்கூட்டியே அறிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக நகர்ப்புறங்களில் பகல் நேர மின்சாரத் தேவையைக் குறைப்பதன் மூலம், அத்தியாவசியத் தேவைகளுக்கான மின் விநியோகத்தை உறுதிப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
“தற்போதைய உலகளாவிய சூழலில் மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது காலத்தின் கட்டாயம். இந்த தற்காலிக மூடல் நடவடிக்கை மூலம் எரிசக்தி வழங்கல் சங்கிலியில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தைச் சற்றே குறைக்க முடியும்,” என்று கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி, அரசு அலுவலகங்களிலும் மின்சாரத்தைத் சிக்கனமாகப் பயன்படுத்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இயற்கை வெளிச்சத்தைப் பயன்படுத்துதல் மற்றும் தேவையற்ற மின் சாதனங்களைத் தவிர்த்தல் போன்றவை இதில் அடங்கும்.
இந்தக் கட்டுப்பாடுகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், எரிபொருள் இறக்குமதி சீராகும் பட்சத்தில், பெருநாள் விடுமுறைக்குப் பிறகு கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், இந்தத் தொடர் விடுமுறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடும் என ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.





















