கோலாலம்பூர் :
உலகச் சந்தையில் பெட்ரோலியத்தின் விலை மூன்று மடங்கு வரை அதிகரித்திருந்தாலும், மலேசிய மக்களின் நலன் கருதி, BUDI95 மானியத் திட்டத்தின் கீழ் RON95 பெட்ரோலின் விலையை லிட்டருக்கு RM1.99 ஆகவே தொடர்ந்து பராமரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இதனை அறிவித்தார்.
இது குறித்துப் பேசிய பிரதமர், “மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த மானியத்தில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது என்று நான் அமைச்சரவையில் வலியுறுத்தியுள்ளேன். இது கடினமான ஒரு முடிவாக இருந்தாலும், மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்காக இந்தத் தற்போதைய விலையே தொடரும்,” என்று குறிப்பிட்டார்.
மேலும், பெட்ரோனாஸ் (PETRONAS) நிறுவனத்துடன் நடத்தப்பட்ட விரிவான கலந்தாய்வின் அடிப்படையில், எதிர்வரும் மே மாதம் வரை நாட்டின் பொருளாதாரத் தேவையைச் சமாளிக்கத் தேவையான பெட்ரோலிய இருப்பு நம்மிடம் உள்ளதாகப் பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, தற்போதைய உலகளாவிய நெருக்கடியான சூழலில் மலேசியா இத்தகைய சவால்களைச் சிறப்பாகக் கையாண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.





















