கோலாலம்பூரில் உணர்ச்சிப்பொங்க நடைபெற்ற ‘உலக அல்-குட்ஸ் தின’ பேரணி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கோலாலம்பூர் (மார்ச் 13, 2026):

பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான உலக அல்-குட்ஸ் தினத்தை முன்னிட்டு கோலாலம்பூரில் இன்று பிரம்மாண்டப் பேரணி நடைபெற்றது.

தலைநகரின் முக்கிய அடையாளமான தாபுங் ஹாஜி (Tabung Haji) கட்டிடத்திற்கு அருகில் இன்று மதியமே மக்கள் குவியத் தொடங்கினர். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் இந்தப் பேரணியில் உணர்ச்சிப்பூர்வமாகக் கலந்துகொண்டனர்.

கருப்பு நிற உடை அணிந்திருந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், பாலஸ்தீனக் கொடிகளையும் “காசாவைக் காப்போம்”, “அல்-அக்ஸா எங்கள் உரிமை” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs), மாணவர்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த மனிதாபிமானப் பேரணியை முன்னெடுத்தன.

வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்த கையோடு தொடங்கிய இந்தப் பேரணி, மிகவும் கட்டுக்கோப்பான முறையில் அமைதியாக நகர்ந்தது. பேரணியின் இறுதியில், பாலஸ்தீனப் பிரச்சினை தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய முறையீட்டு மனுவைச் சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தைச் சீர்செய்யும் பொருட்டு, நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். எவ்வித அசம்பாவிதமும் இன்றி இந்தப் பேரணி அமைதியான முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here