கோலாலம்பூர் | மார்ச் 14, 2026:
சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜம்ரி வினோத் மற்றும் தமிம் தாரி மீதான விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், இருவரும் தாய்லாந்து நாட்டிற்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என தேசிய போலீஸ் படைத் தலைவர் (IGP) டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி சோகோ (SOGO) வளாகத்தில் நடைபெற்ற பேரணியைத் தூண்டியது மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டதாக ஜம்ரி வினோத்திற்கு எதிராக, தண்டனைச் சட்டம் பிரிவு 505(b)-இன் கீழ் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தச் சட்டத்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
அதேநேரம் தமிம் தாரி, இந்து சமய வழிபாட்டுச் சின்னமான சூலத்தைச் சேதப்படுத்தியது மற்றும் சமயத்தை அவமதிக்கும் நோக்கில் செயல்பட்டது தொடர்பில், தண்டனைச் சட்டம் பிரிவு 295-இன் கீழ் (வழிபாட்டு இடத்தைக் களங்கப்படுத்துதல்) அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றத்திற்கு இவருக்கும் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
“உளவுத்துறை தகவல்களின்படி இருவரும் எல்லையைத் தாண்டி தாய்லாந்து சென்றிருக்கக் கூடும் எனத் தெரிகிறது. அவர்களைக் கண்டறிந்து மலேசியாவிற்கு அழைத்து வரத் தாய்லாந்து அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளோம்,” என ஐஜிபி காலிட் இஸ்மாயில் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இருவருக்கும் எதிரான விசாரணை ஆவணங்கள் ஏற்கனவே சட்டத்துறை அலுவலகத்திற்கு (AGC) பரிந்துரைக்கப்பட்டு, அடுத்தகட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் தயாராக உள்ளன.





















