SUKE விரைவுச்சாலையில் கோர விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி!

கோலாலம்பூர்:

சுங்கை பீசி-உலு கிள்ளான் உயர்மட்ட விரைவுச்சாலையில் (SUKE) நிகழ்ந்த ஒரு கொடூரமான விபத்தில் 24 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அதிவேகமாக வந்த கார் மோதியதில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.

காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யூசுப் இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில்: நேற்று மாலை 5:56 மணியளவில் SUKE விரைவுச்சாலையின் 0.3 கிலோமீட்டர் அடையாளக் குறியீட்டில் இந்த விபத்து நிகழ்ந்தது.

காஜாங்கிலிருந்து அம்பாங் நோக்கிச் சென்ற கார் ஒன்று, ‘ஸ்லிப் ரோடு’ (Slip Road) பகுதிக்குள் நுழையும்போது மிக அதிவேகமாக வந்துள்ளது. முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, சாலையின் வலதுபுறத்தில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது அந்தக் கார் பலமாக மோதியது.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒரு மெக்கானிக் ஆவார். காரின் வேகமான தாக்கத்தால் அவர் தலையில் பலத்த காயமடைந்து, இடது கை துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய 26 வயதுடைய இ-ஹெய்லிங் (e-hailing) ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். விசாரணைகளுக்குப் பிறகு அவர் இன்று போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த விபத்து தொடர்பான ஒரு நிமிடம் 18 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மற்றொரு வாகனத்தின் பின்னால் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் (Dashcam) கார் மோதும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்த விபத்து குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் சைபுதீன் சாதுனை 011-21119379 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here