மெர்சிங் ஆற்றில் மூழ்கி காணாமல் போன 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

மெர்சிங் | மார்ச் 25, 2026

ஜோகூர், மெர்சிங் அருகே உள்ள கம்போங் பெத்தா (Kampung Peta) படகுத்துறை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது காணாமல் போன 15 வயது சிறுவன், இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டார்.

மரணமடைந்த சிறுவன் முகமட் ஆடம் ஹசிக் (Muhammad Adam Haziq) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று (மார்ச் 24) இரவு சுமார் 9:24 மணியளவில் இச்சம்பவம் குறித்து தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்தது. சம்பவ இடம் தீயணைப்பு நிலையத்திலிருந்து சுமார் 135 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததால், மீட்புக் குழுவினர் இரவு 11:45 மணியளவிலேயே அங்கு சென்றடைய முடிந்தது.

இன்று காலை 9:00 மணியளவில் சிறுவனின் குடும்பத்தாருடன் கலந்தாலோசித்த பிறகு, அதிகாரப்பூர்வத் தேடுதல் வேட்டை (SAR) தொடங்கப்பட்டது.

மதியம் 12:41 மணியளவில், தீயணைப்புத் துறையின் நீர் மீட்புப் பிரிவினர் (PPDA) சிறுவனின் உடலைக் கண்டெடுத்தனர்.

சிறுவன் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில், 6 மீட்டர் ஆழத்தில் உடல் கண்டெடுக்கப்பட்டது என்று, மெர்சிங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரிண்டெண்டெண்ட் அப்துல் ரசாக் அப்துல்லா சானி (Supt Abdul Razak Abdullah Sani) கூறினார்.

மேலும் சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மெர்சிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு ‘திடீர் மரணம்’ (Sudden Death) என வகைப்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மலேசியாவின் பல பகுதிகளில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக மக்கள் நீர்நிலைகளை நாடிச் செல்லும் நிலையில், கடந்த சில நாட்களில் மட்டும் இது போன்ற பல நீரில் மூழ்கும் மரணங்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here