புத்ராஜெயா | ஏப்ரல் 1, 2026:
வணிக மேலாண்மை ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த கணக்கு சேவை வழங்குநர் ஒருவர், சுமார் 4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC) கைது செய்யப்பட்டுள்ளார்.
30 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் சந்தேக நபர், நேற்று (மார்ச் 31) இரவு 8 மணியளவில் புத்ராஜெயாவிலுள்ள MACC தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்கச் சென்றபோது கைது செய்யப்பட்டார்.
இன்று (ஏப்ரல் 1) புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் (Remand) எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையின்படி, சந்தேக நபர் 2023 முதல் 2025-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த முறைகேடுகளில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. அவர் சமர்ப்பித்த போலி ஆவணங்களில் பின்வரும் செலவினங்கள் அடங்கும்: அவற்றில் போக்குவரத்து மற்றும் பயண உரிமைகோரல்கள், கணக்கியல் கட்டணம், ஊழியர் சம்பளம் மற்றும் பொழுதுபோக்கு செலவுகள் (Entertainment expenses), மற்றும் ஜெனரேட்டர்கள் மற்றும் டீசல் கொள்முதல், நிலப்பரப்பு (Landscaping) பணிகளுக்கான கொடுப்பனவுகள் அத்தோடு இதர செலவுகள்: கிரெடிட் கார்டு கட்டணங்கள், சொத்து மற்றும் உபகரணங்கள் வாங்குதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் போலி விவரங்களைச் சமர்ப்பித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தக் கைது நடவடிக்கையை MACC புலனாய்வுப் பிரிவின் மூத்த துணை இயக்குநர் டத்தோ யுஹாபிஸ் முகமட் சாலே (Datuk Yuhafiz Mohd Salleh) உறுதிப்படுத்தியுள்ளார்.





















