கோலாலம்பூர் | ஏப்ரல் 1, 2026:
மலேசியாவின் மானிய விலையிலான எரிபொருள் கடத்தப்படுவதைத் தடுக்கவும், முறையற்ற பயன்பாட்டைக் குறைக்கவும் RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் மூன்று புதிய கடுமையான கொள்கைகள் இன்று முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வந்துள்ளன.
உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) அமல்படுத்தியுள்ள புதிய விதிகளின் படி, வெளிநாட்டுப் பதிவு எண் கொண்ட வாகனங்கள் எக்காரணம் கொண்டும் மானிய விலையிலான RON95 பெட்ரோலை நிரப்ப அனுமதி இல்லை.
தானியங்கி எரிபொருள் நிலையங்களில் (Self-service pumps) சர்வதேச கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது மானிய விலை எரிபொருள் மலேசியர்களுக்கு மட்டுமே கிடைப்பதை உறுதி செய்யும்.
அத்தோடு டீசல் வாகனங்களுக்கான எரிபொருள் நிரப்பும் அளவிலும் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன என்று, உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சக அமலாக்கப் பிரிவு தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் ஆடம் (Datuk Azman Adam) கூறினார்.
குறிப்பாக எல்லைப் பகுதிகளில் எரிபொருள் கடத்தப்படுவதைத் தடுக்க ‘ஆபரேஷன் டிரிஸ் 4.0’ மூலம் தீவிர ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.
சிசிடிவி (CCTV) கேமராக்கள் மற்றும் ரகசிய ஒற்றர்கள் மூலம் எரிபொருள் நிலையங்கள் கண்காணிக்கப்படும் என்றும், விற்பனை திடீரென அதிகரிக்கும் நிலையங்கள் குறித்து எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாகத் தகவல் வழங்கும் என்றும் சந்தேகத்திற்குரிய விற்பனை நடைபெறும் இடங்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று முகாமிட்டு ஆய்வு செய்வார்கள் அவர் கூறினார்.





















