அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு அதிரடி உயர்வு: கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் வலிமை பெற்ற மலேசிய நாணயம்!

கோலாலம்பூர் | ஏப்ரல் 6, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், சர்வதேசச் சந்தையில் நிலவும் சாதகமான சூழலால் அமெரிக்க டாலர் மற்றும் பிற முக்கிய நாடுகளின் நாணயங்களுக்கு நிகராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு இன்று காலை வர்த்தகத் தொடக்கத்தில் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளது.

இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 4.02 என்ற அளவில் வலுவடைந்துள்ளது. இது கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடுகையில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

சர்வதேசச் சந்தையில் ‘பிரண்ட்’ கச்சா எண்ணெய் (Brent Crude) விலை ஒரு பேரல் 110 டாலராக உயர்ந்துள்ளது. எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான மலேசியாவிற்கு இது சாதகமாக அமைந்துள்ளது என்று, பேங்க் முவாமலாட் மலேசியா (Bank Muamalat Malaysia) நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் முகமட் அஃப்சானிஸாம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள உறுதியான நிலைப்பாடு, சர்வதேச வர்த்தகச் சூழலில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க டாலர் மட்டுமின்றி, ஆசிய மற்றும் ஐரோப்பிய பிராந்தியத்தின் முக்கிய நாணயங்களான சிங்கப்பூர் டாலர் (SGD), ஜப்பானிய யென் (JPY) மற்றும் யூரோ (EUR) ஆகியவற்றிற்கு நிகராகவும் ரிங்கிட் இன்று வலிமை பெற்றுள்ளது.

தற்போது ரிங்கிட் மதிப்பு உயர்ந்துள்ள போதிலும், உலகளாவிய பணவீக்க அழுத்தம் மற்றும் வணிகச் சூழலில் நிலவும் சில பலவீனமான தன்மைகளால், வரும் நாட்களில் ரிங்கிட்டின் மதிப்பு 4.03 முதல் 4.05 வரையிலான வரம்பிற்குள் (Range) நிலைபெறக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here