காலபைரவரை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக அஷ்டமி திதி திகழ்கிறது. தேய்பிறை அஷ்டமியில் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர்வதற்குரிய வழிபாட்டையும் வளர்பிறை அஷ்டமியில் நம்முடைய செல்வ வளம் அதிகரிப்பதற்குரிய வழிபாட்டையும் நாம் செய்ய வேண்டும்.
அஷ்டமி நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறை நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகளை முற்றிலும் நீக்கும். எந்த ஒரு செயலை செய்யும் பொழுதும் தடை வந்து கொண்டே இருக்கிறது என்னும் பட்சத்தில் வளர்பிறை அஷ்டமிலோ அல்லது தேய்பிறை அஷ்டமியிலோ அல்லது பைரவருக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம்.
இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படக்கூடியது வெட்டிவேர் மாலை. வெற்றிகளை வாரி வழங்கக் கூடிய ஒரு வேராக தான் இந்த வெட்டி வேர் திகழ்கிறது. இதை மாலையாக தொடுத்து அருகில் இருக்கக் கூடிய காலபைரவரின் ஆலயத்திற்கு எடுத்துச்சென்று பன்னீரில் முழுவதுமாக நனைத்து காலபைரவருக்கு சாற்ற வேண்டும். காலபைரவர் வாசனை பிரியர் என்று கூறப்படுவதால் வெட்டி வேருடன் சேர்த்து ஜவ்வாது, புனுகு போன்ற பொருட்களையும் வாங்கிக் கொடுப்பதன் மூலம் கால பைரவர் மனம் மகிழ்ந்து நம்முடைய செயல்களில் இருக்கக்கூடிய தடைகளை நீக்குவார்.
மேலும் 8 நல்லெண்ணெய் தீபங்களை ஏற்றி வைத்து மனமுருகி வேண்ட வேண்டும்.அப்படிபட்ட தடைகள் நீங்கி அந்த காரியம் வெற்றிகரமாக நடைபெற்று விட்ட பிறகு கால பைரவருக்கு அபிஷேகத்திற்காக அனைத்து விதமான பொருட்களையும் வாங்கிக் கொடுப்பதோடு வஸ்திரமும் வாங்கி கொடுத்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையில் வழிபாடு செய்ய நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு காரியத்திலும் தடைகள் வரும் பட்சத்தில் அந்த தடைகளை நீக்கி காரிய வெற்றியை பெறுவதோடு மனநிம்மதியையும் பெறலாம்.
கால பைரவருக்கு உகந்த தினத்தில் இந்த முறையில் கால பைரவரை வழிபாடு செய்பவர்களுக்கு காலபைரவரின் அருளால் தடைகளும் தடங்கல்களும் நீங்கும்.




















