ரஃபிஸி ரம்லி மீது ஒழுங்கு நடவடிக்கை? PKR மேலிடம் ஆலோசனை – அதிருப்தியில் மாநிலத் தலைவர்கள்!

கோலாலம்பூர் | ஏப்ரல் 7, 2026:

லேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தையும், பி.கே.ஆர் (PKR) கட்சியையும் கடுமையாக விமர்சித்து வரும் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்துக் கட்சியின் ஒழுங்குமுறை வாரியம் ஆலோசிக்க உள்ளது.

இது குறித்துப் பேசிய பி.கே.ஆர் கட்சியின் செயலாளர் நாயகம் டத்தோ டாக்டர் புசியா சாலே, “ரஃபிஸிக்கு எதிராக எழுந்துள்ள புகார்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்துக் கட்சியின் ஒழுங்குமுறை வாரியத்துடன் நான் விரிவாக விவாதிக்க உள்ளேன்,” என்று தெரிவித்துள்ளார்.

ரஃபிஸியின் அண்மைக்கால விமர்சனங்கள் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதாகப் பல மாநிலத் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்:

சரவாக் & மலாக்கா சேர்ந்த மாநில தலைவர்கள், ரஃபிஸியின் கருத்துக்கள் கட்சி ஒற்றுமையைச் சீர்குலைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். கொள்கை உடன்பாடு இல்லையென்றால் அவர் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

அதேநேரம் கிளந்தான் தலைவர்கள் கூறுகையில், கருத்து வேறுபாடுகளைக் கட்சிக்குள்ளேயே பேசித் தீர்க்க வேண்டுமே தவிர, பொதுவெளியில் விமர்சிப்பது முறையல்ல எனத் தெரிவித்துள்ளனர்.

ரஃபிஸியின் செயல்பாடுகள் உட்கட்சி அமைதியைப் பாதிப்பதாக ஜோகூர் மாநிலத் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினரான ரஃபிஸி ரம்லி, தனது விமர்சனங்கள் கட்சியைக் கவிழ்ப்பதற்காக அல்ல, மாறாகத் தவறுகளைச் சரிசெய்யவே தான் பேசுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) போன்ற பொது நிறுவனங்களின் நம்பகத்தன்மை மற்றும் தேசத்தின் முக்கியப் பிரச்சினைகள் குறித்தே தான் குரல் கொடுப்பதாக அவர் தற்காத்துக் கொண்டுள்ளார்.

முன்னாள் பொருளாதார அமைச்சரான ரஃபிஸி ரம்லி, கட்சியின் ஒரு பிரிவினரிடையே செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும், தற்போதைய ஆட்சி முறை குறித்து அவர் வைக்கும் விமர்சனங்கள் கட்சித் தலைமைக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஒழுங்குமுறை வாரியம் எடுக்கப்போகும் முடிவு பி.கே.ஆர் கட்சியின் எதிர்கால ஒற்றுமையில் முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here