ஈரானின் 10 அம்சத் திட்டம்: ‘இரட்டை வேடம்’ குறித்து அன்வார் இப்ராகிம் எச்சரிக்கை!

கோலாலம்பூர்:

ஈரான் முன்மொழிந்துள்ள 10 அம்ச அமைதித் திட்டத்தை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வரவேற்றுள்ளார். அதே வேளையில், அமைதிப் பேச்சுவார்த்தைகள் என்ற பெயரில் ‘ஏமாற்று வேலைகளோ அல்லது இரட்டை வேடமோ’ இடம்பெற்றால், அந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது என அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

ஈரானுக்கு மட்டுமல்லாமல் ஈராக், லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான அமைதி ஒப்பந்தம் அவசியம் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

காஸாவில் தொடரும் இனப்படுகொலை மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் தார்மீகக் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பேச்சுவார்த்தை சூழலை உருவாக்க அயராத அரசதந்திர முயற்சிகளை மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பின் பங்களிப்பை அன்வார் வெகுவாகப் பாராட்டினார். பாகிஸ்தானின் இந்த முயற்சி முஸ்லிம் ஒற்றுமையின் உச்சம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மலேசியாவை மத்தியஸ்தராகச் செயல்படக் கோரியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் அமைதி ஏற்படத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க மலேசியா தயாராக உள்ளது.

மோதல்களைத் தீர்க்க ‘அரசதந்திரம்’ மட்டுமே ஒரே வழி என்றும், போர் நிறுத்த விதிமுறைகளை அனைத்துத் தரப்பினரும் நல்லெண்ணத்துடன் பின்பற்ற வேண்டும் என்றும் மலேசிய வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்ட இரண்டு வார காலப் போர் நிறுத்தத்தை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வரவேற்றுள்ளார். இது பதற்றத்தைத் தணிக்க உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here