பிரிக்பீல்ட்ஸ் நகைக்கடை கொள்ளை: 5 நிமிடங்களில் 9.7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகளைச் சுருட்டிய ஆயுதக் கும்பல்!

கோலாலம்பூர்:

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் (Brickfields) பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், இன்று காலை ஆயுதமேந்திய கும்பல் ஒன்று பட்டப்பகலில் புகுந்து, துணிகரமான முறையில் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை சுமார் 10:48 மணியளவில், ஒரு வெள்ளை நிற நிசான் அல்மேரா (Nissan Almera) காரில் வந்த நான்கு பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல், ‘கே.வி.டி கோல்ட் & டைமண்ட்ஸ்’ (KVT Gold & Diamonds) கடைக்கு முன்னால் வந்து இறங்கியது.

பிரிக்பீல்ட்ஸில் பட்டப்பகலில் துணிகரம்: நகைக்கடையில் புகுந்து நிமிடங்களில் கொள்ளையடித்த ஆயுத கும்பல்

துப்பாக்கிகளுடன் வந்த அக்குழுவினர், முதலில் கடையின் வெளியே பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கி நிலைகுலையச் செய்தனர். கடையின் உள்ளே புகுந்த கொள்ளையர்கள், ஊழியர்களைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, காட்சிப் பெட்டிகளில் (Display cases) வைக்கப்பட்டிருந்த நகைகளைச் சில நிமிடங்களிலேயே சூறையாடினர்.

கொள்ளை முடிந்த கையோடு, வந்த காரிலேயே கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

கோலாலம்பூர் மாநகர காவல் துறைத் தலைவர் டத்தோ ஃபாத்தில் மர்சுஸ் (Datuk Fadil Marsus) வெளியிட்ட தகவலின்படி, கொள்ளையர்கள் சுமார் 9.7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகளைச் சூறையாடியுள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. இருப்பினும், கொள்ளையர்களால் தாக்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் உடல்நிலை குறித்துத் தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

பிரிக்பீல்ட்ஸில் நிகழ்ந்த துணிகரம், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு 97 லட்சம் ரிங்கிட்

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில், தற்போது மீண்டும் ஒரு துணிகரக் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது பிரிக்பீல்ட்ஸ் பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தடய அறிவியல் நிபுணர்களின் உதவியுடன் ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர். தப்பியோடிய கும்பலைப் பிடிக்க மாநிலம் முழுவதும் தீவிர வாகனத் தணிக்கை மற்றும் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொள்ளை தொடர்பான மேலதிக விவரங்களை அறிய, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here