அட்சய திருதியை பூஜை

“அட்சயம்” என்றால் குறைவில்லாதது, அழியாதது, என்றும் பெருகிக் கொண்டே இருப்பது என்றும் பொருள். இந்த நாளில் செய்யப்படும் நற்செயல்கள், பூஜைகள், தானங்கள் பல மடங்கு வளர்ந்து, வாழ்வில் செல்வம், சுகம், ஆனந்தம் தரும் என்று ஐதீகம்.

அட்சய திருதியை தெய்வீக சிறப்பு :

இந்த புனித நாளில் தான் பரசுராமர் அவதரித்தார். மகாலட்சுமி அருள் அதிகரிக்கும் நாள். குபேரன் செல்வத்தை பெற்ற நாள் எனவும் கூறப்படுகிறது. ஆகவே இந்த நாள் செல்வமும், புண்ணியமும் இரட்டிப்பாகும் அரிய தருணம். அட்சய திருதியை அன்று செய்ய வேண்டிய முக்கிய பூஜை, அட்சய பானை பூஜை. இந்த பூஜையை செய்வதால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை மூன்றாம் திதி, அட்சய திருதியை.

பானை பூஜை செய்வது எப்படி?

  • ஒரு வெண்கல அல்லது பித்தளை பானை எடுக்க வேண்டும்.
  • அதில் குங்குமம் வைத்து, பச்சரிசி நிரப்ப வேண்டும்
  • பானையின் கழுத்தில் மஞ்சள் துணி கட்ட வேண்டும்
  • பூமாலை, துளசி ஆகியவற்றால் அலங்கரிக்க வேண்டும்
  • வசதி இருப்பின் தங்க நகை ஒன்றை அரிசியின் மேல் வைக்கலாம்
  • பிறகு பானையின் முன் கோலம் இடவும்.
  • பூ, துளசி, அட்சதை தூவி, கற்பூரம் அல்லது நெய் தீபம் காட்டவும்
  • சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்து குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுக்கவும்.

இந்த பூஜை வாழ்க்கையில் குறையாத செல்வத்தையும் நலன்களையும் தரும். அட்சய திருதியை அன்று ஆலமர இலையில் மகா மிருத்யுஞ்ஜய மந்திரம் ஜெபித்து, அதை நோயாளியின் தலையணையின் கீழ் வைத்தால் நோய் விரைவில் குணமாகும் என்று நம்பப்படுகிறது.அட்சய திருதியை அன்று புனித நதிகளில் நீராடி, இறைவனை வழிபட்டால் வாழ்க்கையில் குறைவில்லா செல்வமும், ஆனந்தமும் கிடைக்கும்.

இந்த நாளில் செய்யும் தானங்கள் அட்சய பலன் தரும்.

உணவு தானம் – ஏழைகளுக்கு உணவு, நீர்மோர், குடை வழங்கினால் மறுபிறவியில் ராஜயோகம்.

ஆடை தானம் – நோய்கள் நீங்கி உடல் நலம் பெறலாம்

பழங்கள் தானம் – உயர்ந்த பதவியும் மரியாதையும் கிடைக்கும்.

நீர்மோர், பானகம் தானம் – கல்வியில் முன்னேற்றம், அறிவு வளர்ச்சி

தானிய தானம் – அகால மரணம் நீங்கும். ஆயுள் நீடிக்கும்.

தயிர் சாதம் தானம் – பாவ விமோசனம். வாழ்க்கையில் முன்னேற்றம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here