தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு: முதல்வர் மற்றும் அவரது மகனே காரணம் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் காட்டம்!

தென்காசி:

தமிழகத்தில் நிலவும் சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டிற்கு முதலமைச்சர் மற்றும் அவரது மகனே முக்கியக் காரணம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஆனந்தன் ஐயாசாமியை ஆதரித்து ராஜ்நாத் சிங் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். சிந்தாமணி பேருந்து நிலையப் பகுதியிலிருந்து காமராஜர் சிலை வரை பிரம்மாண்ட வாகனப் பேரணியிலும் அவர் கலந்துகொண்டார்.

பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ராஜ்நாத் சிங் தெரிவித்ததாவது: சட்டம் – ஒழுங்கு: “தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கு திமுக அரசின் அலட்சியமே நேரடிக் காரணமாகும்.”

“திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகைத் தீபம் ஏற்றச் சென்ற பக்தர்களைக் காவல்துறை தடுத்து நிறுத்தி, கைது செய்துள்ளது. நீதிமன்ற உத்தரவு இருந்தும் பக்தர்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு பறித்து வருகிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சியமைந்ததும், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது உறுதி செய்யப்படும். இது பாஜகவின் உத்தரவாதம்.”

“திமுகவினர் கொள்ளையடித்த ஊழல் பணம் முழுமையாக மீட்டெடுக்கப்படும். காங்கிரஸ் மற்றும் திமுக தடுத்து நிறுத்திய மகளீர் இடஒதுக்கீட்டு மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும்” என்று அவர் சொன்னார்.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக அரசின் குடும்ப அரசியலையும், சட்டம் – ஒழுங்கு விவகாரத்தையும் முன்னிறுத்தி பாஜக தனது பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளதை ராஜ்நாத் சிங்கின் இந்த உரை உறுதிப்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here