கோலாலம்பூர்:
சபா, சண்டாக்கான் கம்போங் பஹாகியாவில் அண்மையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தின் போது, தீயணைப்பு, மீட்புத் இலாகாவினரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டிய இளைஞர் ஒருவர் இன்று தனது செயலுக்குப் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
39 வயதுடைய ரோசைசார் ரொசைனி எனும் அந்த நபர், சுமார் 1,000 வீடுகளைச் சாம்பலாக்கிய அந்த விபத்தின் போது, குழந்தைகள் அலறியடித்து ஓடுவதைக் கண்டு மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானதால் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு பேசியதாகத் தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள் பின்புறமாக நின்று தீயை அணைக்கப் போராடியதை உணராமல் தாம் தவறாகப் பேசிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், தனது சொற்களைத் திரும்பப் பெறுவதாகக் கூறினார்.
குறுகிய பாதைகள், தண்ணீர் பற்றாக்குறை போன்ற சவால்களுக்கு மத்தியிலும் தீயணைப்புத் இலாகாவினர் மேற்கொண்ட கடினமான பணிகளைத் தாம் இப்போது புரிந்துகொண்டதாக பெர்னாமா செய்தியாளர்களிடம் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.




















