காவல்துறை சீருடை அணிந்து ‘டிக் டாக்’ வீடியோ: சுபாங் ஜெயாவில் வாலிபர் அதிரடி கைது!

கோலாலம்பூர்:

காவல்துறை சின்னம் பொறிக்கப்பட்ட கவச உடை (Vest) மற்றும் தலைக்கவசத்தை (Helmet) அனுமதியின்றி அணிந்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட உள்ளூர்க்காரர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட நபர் காவல்துறை உபகரணங்களை அணிந்திருக்கும் வீடியோ ‘டிக் டாக்’ (TikTok) தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, இது குறித்து நேற்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெற்றதாக நம்பப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சுபாங் ஜெயா, USJ பகுதியில் வைத்து 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் கைது செய்யப்பட்டார் என்று, சுபாங் ஜெயா மாவட்டத் துணைப் போலீஸ் தலைவர் சூப்பிரிண்டெண்டென்ட் முகமட் ஃபைருஸ் ஜாபர் கூறினார்.

சந்தேக நபர் மீது காவல்துறை சட்டம் 1967 பிரிவு 89 இன் கீழ் காவல்துறை சீருடை மற்றும் உபகரணங்களை அனுமதியின்றி சட்டவிரோதமாகப் பயன்படுத்துதல், தண்டனைச் சட்டம் (பிரிவு 504): பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் அவமதித்தல், தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 (பிரிவு 233): இணையத்தில் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தைப் பதிவேற்றுதல் மற்றும் சிறு குற்றங்கள் சட்டம் 1955 (பிரிவு 14): பொது இடத்தில் அவமரியாதையான முறையில் நடந்துகொள்ளுதல் ஆகிய சட்ட்ப் பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் சொன்னார்.

சந்தேக நபர் தற்போது மேலதிக விசாரணைக்காக போலீஸ் தடுப்புக் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் யாரும் சட்டத்தைக் கையில் எடுக்கவோ அல்லது காவல்துறை அடையாளங்களைத் தவறாகப் பயன்படுத்தவோ வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here