கோலாலம்பூர்:
சிலாங்கூர், பூச்சோங் பகுதியில் போதைப்பொருள் மயக்கத்தில் இருந்த நபர் ஒருவர், நள்ளிரவில் ஒரு வீட்டின் கதவை ஆக்ரோஷமாகத் தட்டி அச்சுறுத்தியதோடு அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு சுமார் 10.50 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மர்ம நபர் ஒருவர் வீட்டின் கதவை ஆக்ரோஷமாகத் தட்டியுள்ளார். யாரோ தன்னைத் துப்பாக்கியால் சுட வருவதாகக் கூச்சலிட்ட அந்த நபர், பாதுகாப்பிற்காக வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளார். வீட்டிற்குள் நுழைய முடியாத ஆத்திரத்தில், அங்கிருந்த காலணி அடுக்கைச் (Shoe Rack) சேதப்படுத்திய அந்த நபர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீதும் ஏற முயற்சி செய்துள்ளார். அத்தோடு வீட்டில் பச்சிளம் குழந்தை இருந்ததால், அந்த நபரின் செயலால் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கும் அச்சத்திற்கும் ஆளாகியுள்ளதாக பாதிக்கப்பட்டவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், அந்த நபர் ‘மஷ்ரூம்’ (Mushroom) எனப்படும் ஒருவகை போதைப்பொருளைப் பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது. அந்தப் போதையின் உச்சத்தில் ஏற்பட்ட பிரம்மை காரணமாகவே அவர் அவ்வாறு நடந்துகொண்டது உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற அசாதாரணமான அல்லது அச்சுறுத்தல் தரக்கூடிய சூழல்களை எதிர்கொள்ளும் பொதுமக்கள், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





















