கோலாலம்பூர்:
சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் குடும்ப வன்முறை தொடர்பான புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மாநில மகளிர் மேம்பாடு மற்றும் நலத்துறை செயற்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்துள்ளார்.
சமூக நலத்துறை (JKM) வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, சிலாங்கூரில் பதிவான குடும்ப வன்முறை வழக்குகளின் விவரம் பின்வருமாறு, 2023 ஆம் ஆண்டு 160 வழக்குகள், 2024 ஆம் ஆண்டு 168 வழக்குகள், 2025 ஆம் ஆண்டு 175 வழக்குகள் என மொத்தம் 503 புகார்கள் பதிவாகியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் 445 பேர் பெண்கள் மற்றும் 58 பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரில் (DUN) பேசிய அன்ஃபால் சாரி, இந்த எண்கள் உண்மையான பாதிப்பை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என்றும் உண்மைகள் மறைக்கப்படுவதாகவும் (Under-Reporting) கூறினார்.
“சமூக நலத்துறைக்கு வரும் புகார்கள் ஒரு பகுதி மட்டுமே. சுமார் 30 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குகள் இன்னும் வெளியே சொல்லப்படாமல் அல்லது புகார் அளிக்கப்படாமல் இருக்கலாம். பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக முன்வந்து புகார் அளிப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது,” என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்கள் முறையான சட்ட ஆலோசனை, ஆலோசனைகள் (Counseling) மற்றும் தற்போதைய சட்டங்களின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மாநில அரசு தற்போது தனியாகப் பாதுகாப்பு இல்லங்களைக் கட்டும் திட்டத்தில் இல்லை. அதற்குப் பதிலாக, 2021-ஆம் ஆண்டு முதல் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புகலிடம் அளிப்பதில் அனுபவம் வாய்ந்த அரசு சாரா நிறுவனங்களுக்கு (NGO) மானியங்களை வழங்கி வருகிறது. நிபுணத்துவம் பெற்ற இந்த அமைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தரமான பாதுகாப்பு வழங்கப்படுவதை இது உறுதி செய்கிறது.
குடும்ப வன்முறைக்கு எதிராக மாநில அரசு ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.





















