புக்கிட் மெர்தாஜாம் மோதல் சம்பவம்: 8 பேர் அதிரடி கைது – 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை!

புக்கிட் மெர்தாஜாம்:

பெராபிட் (Berapit), கம்போங் பாயா போக்குவரத்து சமிக்ஞை சந்திப்பில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர மோதல் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு, இன்று முதல் 7 நாட்கள் போலீஸ் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளனர்.

20 முதல் 47 வயதுடைய இந்த 8 சந்தேக நபர்களையும் வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் ரோஷாயாத்தி ராடெல்லா இன்று உத்தரவிட்டார். பலத்த காயங்களுடன் தலைப்பகுதியில் கட்டுப்போடப்பட்டிருந்த 20 வயது வாலிபர் ஒருவரும் இதில் அடங்குவார்.

நேற்று இரவு சுமார் 10.45 மணியளவில் இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட தவறான புரிதல் வன்முறையாக மாறியது.

இந்த சம்பவத்தில் ஒரு தரப்பினர் ‘புரோட்டான் வீரா’ கார் ஒன்றை மோதியுள்ளனர். காரை விட்டு வெளியே வந்த ஓட்டுநரை இரும்பு ஸ்பேனர் (Iron Spanner) கொண்டு தாக்கியதில் அவருக்குத் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

தாக்கப்பட்ட நபர் பின்னர் ஒரு கும்பலுடன் வந்து எதிர்தரப்பினரைத் தாக்கிப் பழிவாங்கியதாகத் தெரிகிறது.

கார் மோதப்பட்டது மற்றும் ஓட்டுநர் தாக்கப்படுவது தொடர்பான 12 விநாடி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவம் குறித்துத் தகவலறிந்த போலீசார், பல்வேறு இடங்களில் அதிரடிச் சோதனை நடத்தி முதல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர் உட்பட 8 பேரையும் கைது செய்தனர். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரும்பு ஸ்பேனர் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தண்டனைச் சட்டம் பிரிவு 326: ஆயுதங்களைக் கொண்டு பலத்த காயத்தை ஏற்படுத்துதல் (20 ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது பிரம்படி), தண்டனைச் சட்டம் பிரிவு 148: கலகம் செய்தல் (5 ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும்) ஆகிய கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here