கொழும்பு:
இலங்கை நிதி அமைச்சின் கணினிக் கட்டமைப்பை இணையக் குற்றவாளிகள் ஊடுருவி, சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையைத் திருடியுள்ளதாக அந்த நாட்டின் நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
நேற்று (ஏப்ரல் 23) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து பேசிய அவர், இலங்கை அரசு வரலாற்றிலேயே அரசாங்க அமைப்பிலிருந்து இணைய ஊடுருவல் மூலம் திருடப்பட்ட மிக அதிக தொகை இது என்றார்.
திருடப்பட்ட இந்தத் தொகையானது, ஆஸ்திரேலியாவிற்கு இலங்கை அரசு செலுத்த வேண்டிய கடன் தவணைக்காக ஒதுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022-ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மெல்ல மெல்ல மீண்டு வரும் வேளையில், இந்த இணையத் தாக்குதல் அந்நாட்டிற்கு ஒரு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. சுமார் 46 பில்லியன் அமெரிக்க டாலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் இலங்கைக்கு, இது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
நிதி அமைச்சின் பாதுகாப்பு வளையத்தை மீறி இணையக் குற்றவாளிகள் எவ்வாறு ஊடுருவினார்கள் என்பது குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேசப் புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் திருடப்பட்ட பணத்தை மீட்கவும், குற்றவாளிகளைக் கண்டறியவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் இலங்கையில் உள்ள ஏனைய அரசுத் துறைகளின் இணையப் பாதுகாப்புக் குறித்த அச்சத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.





















