பொந்தியான் பொதுச் சாலைகளில் மின்-மிதிவண்டிகளை ஓட்டிய வெளிநாட்டினர் – 18 வாகனங்கள் பறிமுதல்

பொந்தியான்:

பொதுச் சாலைகளில் சட்டவிரோதமாக மின்-மிதிவண்டிகள் மற்றும் மின்-மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்ற வெளிநாட்டினருக்கு எதிராகப் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தச் சோதனையில் மொத்தம் 18 நுண்-நகர்வு வாகனங்கள் (Micro-mobility vehicles) பறிமுதல் செய்யப்பட்டன.

பெக்கான் நானாஸ் (Pekan Nanas), ஜாலான் உத்தாமா தாமான் ஸ்ரீ மாஜு மற்றும் பொந்தியான் ஜெயா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், 56 நபர்களும் 42 வாகனங்களும் சோதனை செய்யப்பட்டன.

பாதுகாப்பு விதிகளை மீறி பொதுச் சாலைகளில் பயன்படுத்தப்பட்ட 18 மின்-மிதிவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் ஓட்டுநர் உரிமம் இல்லாமை, காப்பீடு இல்லாமை மற்றும் காலாவதியான சாலை வரி போன்ற காரணங்களுக்காக இதர வாகன ஓட்டிகளுக்கு 30 சம்மன்கள் வழங்கப்பட்டன.

உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாட்டினரால் ஓட்டப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இரவு நேரத்தில் விளக்குகள் இன்றி ஓட்டப்பட்ட 4 மிதிவண்டிகளும் கைப்பற்றப்பட்டதாக பொந்தியான் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஹஸ்ரத் ஹுசைன் மியோன் கூறினார்.

“நுண்-நகர்வு வாகனங்கள் (E-bikes) பொதுச் சாலைகளில் பயன்படுத்தப்படுவது போக்குவரத்து சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. இவை காப்பீடு செய்யப்படாதவை மற்றும் பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்புத் தரங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்படாதவை என்பதால், மற்ற வாகன ஓட்டிகளுக்கும் இவர்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன” என்று அவர் சொன்னார்.

இந்த வழக்குகள் 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 64-இன் கீழ் (வாகனங்களை 90 நாட்கள் வரை பறிமுதல் செய்ய அனுமதிக்கும் பிரிவு) விசாரிக்கப்படுகின்றன.

விதிகளை மீறுபவர்களுக்கு RM2,000 வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here