ஷா ஆலம்:
சமூக வலைதளங்களில் வைரலாகப் பேசப்பட்டு வந்த பயணச் சேவை மோசடியில் (Travel Service Scam) தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் “இம்ரான்” என்ற நபர் நேற்று (ஏப்ரல் 25) சிலாங்கூரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமை ஆணையர் டத்தோ ஷாசெலி கஹார் இந்தத் தகவலை இன்று செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.
போலீசாருக்குக் கிடைத்த புகார்களின் அடிப்படையில் சனிக்கிழமை அன்று இந்த நபர் பிடிபட்டார்.
சந்தேக நபர் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு போலீஸ் தடுப்புக் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளார்.
சிலாங்கூர் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறது.
“இம்ரான் கொயுபே” (Imran Koyube) என அடையாளம் காட்டப்படும் இந்த நபர் தொடர்பான புகார்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகின. அவர் மீது பல டிராவல் ஏஜென்சிகளின் பெயர்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை ஏமாற்றியது, தனது மனைவியின் அடையாளத்தைப் பயன்படுத்தி வங்கித் தயார்நிலை கடன்களை (Bank Loans) விண்ணப்பித்தது, வெவ்வேறு பெயர்களில் தனது மோசடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தது ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது என்று, “எமினா லேக் சைட் மால்” (Elmina Lakeside Mall) பகுதியில் நடைபெற்ற ராயல் ரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசிய கமிஷனர் ஷாசெலி கஹார்:
“தற்போது சிலாங்கூரில் இந்த நபர் மீது ஒரு புகார் மட்டுமே பதிவாகியுள்ளது. இருப்பினும், நாட்டின் பிற மாநிலங்களிலும் இவருக்கு எதிராகப் புகார்கள் இருப்பதாகத் தெரிகிறது. எனவே, பிற மாநில போலீஸ் பிரிவுகளுடன் இணைந்து விரிவான விசாரணை நடத்தப்படும்.”
சந்தேக நபரால் ஏற்பட்ட இழப்புத் தொகை மற்றும் அவரது ஏமாற்றும் முறைகள் (Modus Operandi) குறித்து இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்றும், விசாரணைக்குக் கூடுதல் கால அவகாசம் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420-இன் (மோசடி) கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.


















