கோலாலம்பூர்:
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கான சிப் (Chip) தேவைகள் உலகளவில் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, தென்கொரியாவின் சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு இன்று முதல் முறையாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலரைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
சாம்சுங் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 12 விழுக்காடு உயர்ந்ததுடன், அதன் போட்டி நிறுவனமான எஸ்கே ஹெய்னிக்ஸ் (SK Hynix) பங்குகளும் 10 விழுக்காடு ஏற்றம் கண்டதால், தென்கொரியாவின் கோஸ்பி (Kospi) பங்குச்சந்தை குறியீடு முதல் முறையாக 7,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் 300 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ள சாம்சுங், தைவானின் டிஎஸ்எம்சி (TSMC) நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது ஆசிய நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இணையாக உலகின் முதல் மூன்று செயற்கை நுண்ணறிவு வல்லரசு நாடுகளில் ஒன்றாகத் தென்கொரியாவை உயர்த்த அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகளுக்கு, சாம்சுங் நிறுவனத்தின் இந்த அசுர வளர்ச்சி பெரும் பலமாக அமைந்துள்ளது.





















