கோலாலம்பூர்:
மலேசியாவில் தற்போது நிலவி வரும் பருவமழை மாற்றக் காலத்தின் (Monsoon Transition) விளைவாக, மே மாதம் இறுதி வரை மாலை மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மழை தொடரும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மார்ச் 29-ஆம் தேதி தொடங்கிய இந்தப் பருவநிலை மாற்றம் குறித்து அதன் தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் விளக்கம் அளித்தார்.
“பல்வேறு திசைகளிலிருந்து வீசும் பலவீனமான காற்றினால் உருவாகும் இடிமேகங்கள், குறுகிய காலத்தில் மிகக் கனமழையைக் கொண்டுவரும்” என அவர் குறிப்பிட்டார்.
இந்த வானிலை பாதிக்கப்படக்கூடிய முக்கிய பகுதிகளாக தீபகற்ப மலேசியாவின் மேற்கு மற்றும் உட்புறப் பகுதிகள், சபா மற்றும் சரவாக் மாநிலங்கள் என்பன அடங்குகின்றன.
பலத்த காற்றுடன் கூடிய இம்மழையினால் திடீர் வெள்ளம், மரம் சரிந்து விழுதல் போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பாக, கடந்த மே 6-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் அதிகபட்சமாக 97.6 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வானிலை மாற்றங்கள் குறித்த உடனுக்குடனான தகவல்களைப் பெற, அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ‘myCuaca’ செயலி வாயிலாக வழங்கப்படும் எச்சரிக்கைகளைக் கவனித்துச் செயல்படுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.





















