கோலாலம்பூர்:
மலேசியத் தலைநகரைத் துடிப்பான கலாச்சார மையமாக உருமாற்றும் நோக்கில், ‘கோலாலம்பூர் விழா’ இனி ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் நிரந்தரமாக நடைபெறும் என கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ அறிவித்துள்ளார்.
நேற்று இரவு கோலாலம்பூர் மாநகர மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டு 2026’ மற்றும் ‘யுனெஸ்கோ படைப்பாற்றல் நகரம்’ ஆகிய இலக்குகளை முன்னிறுத்தி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
வரும் மே 31-ஆம் தேதி வரை 26 இடங்களில் நடைபெறவுள்ள இந்த விழாவில், பாரம்பரியக் கலைகள், நவீன நடனம், திரையரங்கு நிகழ்ச்சிகள் என 80-க்கும் மேற்பட்ட அங்கங்கள் இடம்பெறவுள்ளன.
திங்க் சிட்டி (Think City) மற்றும் மாநகராட்சி இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த முன்னெடுப்பு, நகரின் பாரம்பரியக் கட்டிடங்கள், பொது இடங்களுக்குப் புத்துயிர் அளிப்பதோடு, கலை மற்றும் சமூகத்தின் வாயிலாகத் தேசிய அடையாளத்தை வலுப்படுத்தும் ஒரு நீண்டகால முயற்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




















