பி.ஆர். ராஜன்
|
தேசிய உயர்கல்வி நிதி கழகம் (PTPTN), 2025-ஆம் ஆண்டிற்கான SSimpan SSPN சேமிப்பிற்கு 4.10% என்ற போட்டித்தன்மை மிக்க லாப ஈவை (Dividen) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த அறிவிப்பை PTPTN தலைவர் டத்தோ ஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் 2026 மே 6 ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள மெனாரா PTPTN-இல் வெளியிட்டார். இந்த நிகழ்வில் PTPTN தலைமைச் செயல் அதிகாரி அமாட் டசுக்கி அப்துல் மஜிட், நிர்வாகக் குழுவினர், வியூக பங்காளிகள் கலந்து கொண்டனர்.
போட்டித்தன்மை மிக்க லாபப் பகிர்வு
இந்த 4.10% லாப ஈவு பகிர்வு மூலம் மொத்தம் 6.07 மில்லியன் Simpan SSPN வைப்பாளர்கள் பயனடைவார்கள். இதற்காக RM505.68 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், 2004-இல் சிம்பான் SSPN அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இதுவரை வழங்கப்பட்ட மொத்த டிவிடெண்ட் தொகை RM2.63 பில்லியனை எட்டியுள்ளது.
இந்த லாப ஈவு தொகை நேரடியாக வைப்பாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
வைப்பாளர்கள் தங்களின் சேமிப்பு அறிக்கையை மே 7, 2026 முதல் myPTPTN செயலி வழியாக சரிபார்த்துக் கொள்ளலாம்.
11 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச லாப ஈவு
2024-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 4.05% லாப ஈவுடன் ஒப்பிடும்போது, 2025-ஆம் ஆண்டிற்கான 4.10% விகிதம் மிக உயர்வானதாகும். இது கடந்த 11 ஆண்டுகளில் வழங்கப்பட்ட மிக உயர்ந்த லாப ஈவு பகிர்வு விகிதம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.
நேர்மையான, ஆக்கப்பூர்வமான நிதி மேலாண்மை
டத்தோ ஸ்ரீ நோர்லிஸா தலைமையிலான நிர்வாகத்தின் திறமையான, நேர்மையான நிதி மேலாண்மைக்கு இந்த உயர்வு ஒரு சான்றாகும். இந்தச் சாதனையை உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டிராஜா டாக்டர் ஸம்ப்ரி அப்துல் காதிர் முழுமையாக ஆதரித்துள்ளார். இது PTPTN நிதி நிர்வாக அடைவுநிலை, போட்டித்தன்மைக்கு ஈடுகொடுக்கும் செயல்திறன் ஆகியவற்றுக்கான அமைச்சரின் அங்கிகாரமாகவும் ஊக்கமாகவும் விளங்குகிறது.

ஆக்க முதலீடு, சிறந்த வியுகம்
உள்நாட்டு நிதிச் சந்தை, சுக்குக் (Sukuk) எனப்படும் இஸ்லாமிய நிதி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட குறுகிய, நீண்ட கால ஷரியா அடிப்படையிலான முதலீட்டு உத்திகள் மூலம் இந்த வளர்ச்சி சாத்தியமானது என்று டத்தோ ஸ்ரீ நோர்லிஸா தெரிவித்தார்.
இந்த முதலீட்டு முறை அசலை பாதுகாப்பதுடன், நிலையான வருமானத்தையும் உறுதி செய்கிறது. குறிப்பாக, 2025 முழுவதும் பேங்க் நெகாரா மலேசியாவின் ஓவர்நைட் பாலிசி விகிதம் (OPR) 2.75% ஆக இருந்த நிலையில், 4.10% லாப ஈவு என்பது மிகச் சிறந்த நிகர லாபமாகும்.
பெருமைமிக்க வளர்ச்சி
2025-ஆம் ஆண்டில் Simpan SSPN பெற்ற மொத்த வைப்புத் தொகை RM3.33 பில்லியன் ஆகும். இது 2024-ஆம் ஆண்டுடன் (RM3.17 பில்லியன்) ஒப்பிடும்போது RM154.10 மில்லியன் அல்லது 4.86% அதிகமாகும். கடந்த ஆண்டில் மட்டும் 500,000-க்கும் அதிகமான புதிய கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31, 2025 நிலவரப்படி, மொத்த சேமிப்புத் தொகை RM23.88 பில்லியனை எட்டியுள்ளது.
Simpan SSPN மீது வைப்புத்தொகையாளர்கள் கொண்டிருக்கும் அதீத நம்பிக்கையும் வலுவான ஆதரவும் இந்த மகத்தான வெற்றிக்கு வித்திட்டிருக்கிறது என்று டத்தோஸ்ரீ நோர்லிஸா மகிழ்ச்சியுன் குறிப்பிட்டார்.
கூடுதல் சலுகைகள், அதிகமான அனுகூலங்கள்
பிள்ளைகளின் உயர்கல்விக்காகச் சேமிக்க. Simpan SSPN ஒரு சிறந்த தளமாகும். இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
* ஆண்டுக்கு RM8,000 வரை வருமான வரி விலக்கு.
* இலவச தக்காஃபுல் (Takaful) பாதுகாப்பு.
* தகுதியுள்ள குடும்பங்களுக்கு RM10,000 வரை இலவச ஊக்கத் தொகை (Geran Sepadan).
* அரசாங்க உத்தரவாதம், ஷரியா இணக்கம்.
மேலும், பட்ஜெட் 2025-இல் ‘கிரான் பாடானான் இஹ்சான்’ (Geran Padanan Ihsan – GAPAI) திட்டத்தின் கீழ், மாத வருமானம் RM4,000 முதல் RM6,000 வரை உள்ள குடும்பங்களும் இப்போது RM5,000 வரை ஊக்கத் தொகை பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
மேலதிக விவரங்களுக்கு www.ptptn.gov.my என்ற இணையதளத்தை அணுகலாம் அல்லது myPTPTN செயலியைப் பயன்படுத்தலாம்.



















