கோலாலம்பூர்:
மலேசியாவின் தேசிய ஒளிபரப்பு நிறுவனமான ஆர்டிஎம் (RTM) மற்றும் முன்னணி செயற்கைக்கோள் தொலைக்காட்சியான அஸ்ட்ரோ (Astro) இடையிலான 30 ஆண்டுகால ஒத்துழைப்பு, வரும் ஜூலை 1-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
ஒப்பந்த நிபந்தனைகள் மற்றும் ஒளிபரப்பு கட்டணங்கள் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததே இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இதனைத் ஹதொடர்ந்து ஜூலை 1 முதல், அஸ்ட்ரோவின் செயற்கைக்கோள் தளம் மற்றும் அதன் ஓ.டி.டி (OTT) செயலிகளில் இருந்து TV1-HD, TV2-HD மற்றும் Okey ஆகிய அலைவரிசைகள் நீக்கப்படும்.
அலைவரிசைக்கான கட்டணங்கள் (Channel fees) தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனைச் சமாளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஆர்டிஎம் விளக்கம் அளித்துள்ளது. நிதி ரீதியாகக் கட்டுப்படியாகாத ஒப்பந்த நிபந்தனைகளைத் தொடர விரும்பாததால் இந்த விலகல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அஸ்ட்ரோவில் சேவை நிறுத்தப்பட்டாலும், பொதுமக்கள் தங்களின் டிஜிட்டல் டிவி (myFreeview) அல்லது ஆர்டிஎம்-இன் பிரத்யேகமான RTMKlik செயலி மற்றும் இணையதளம் வாயிலாக இந்த அலைவரிசைகளைத் தொடர்ந்து இலவசமாகப் பார்க்கலாம்.
இந்த திடீர் அறிவிப்பு, கடந்த மூன்று தசாப்தங்களாக அஸ்ட்ரோ வாயிலாகத் தேசிய அலைவரிசைகளைப் பார்த்து வந்த சந்தாதாரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அரசு சார்ந்த அலைவரிசைகளைச் சிக்கனமாகவும் நேரடியாகவும் மக்களுக்குக் கொண்டு சேர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.




















