விடுதியில் மயங்கி விழுந்த படிவம் 1 மாணவர் உயிரிழப்பு; மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டதாக பிரேதப் பரிசோதனையில் தகவல்!

குவா மூசாங்:

இங்குள்ள பாலோ பகுதியில் அமைந்துள்ள இடைநிலைப் பள்ளியின் விடுதியில் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்ட படிவம் 1 மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

“நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.53 மணியளவில் 13 வயது சிறுவன் ஒருவன் விடுதியில் மயக்க நிலையில் இருப்பதாக அவனது தந்தையிடமிருந்து எங்களுக்கு புகார் கிடைத்தது,” என, குவா மூசாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டன் சிக் சூன் ஃபூ தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவர் உடனடியாக பள்ளி நிர்வாகத்தினரால் சிக்கு 3 (Chiku 3) சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவ அதிகாரிகள், மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 3.30 மணியளவில் குவா மூசாங் மருத்துவமனையில் மாணவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் அந்த மாணவரின் மரணத்திற்கு மூளையில் தன்னிச்சையாக ஏற்பட்ட இரத்தக் கசிவு (Spontaneous bleeding in the head) மற்றும் நுரையீரலில் நீர் கோர்த்திருந்தது (Fluid in the lungs) கண்டறியப்பட்டது.

“இந்தச் சம்பவத்தில் எந்தவிதமான குற்றவியல் கூறுகளும் (Criminal elements) கண்டறியப்படவில்லை. மாணவரின் உடல் தற்போது நல்லடக்கத்திற்காக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,” என்று சுப்ரிடெண்டன் சிக் சூன் ஃபூ மேலும் விளக்கமளித்தார்.

தற்போது இந்த வழக்கு திடீர் மரணம் (Sudden Death) என வகைப்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே வேளையில், உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகும் வகையில், இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் தேவையற்ற ஊகங்களை பரப்ப வேண்டாம் என காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here