ஜோகூர் மாநிலத் தேர்தல்: தனித்துப் போட்டியிடும் BN-ன் முடிவுக்கு மஇகா, மசீச ஆதரவு!

கோலாலம்பூர்:

வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) கூட்டணி தனித்துப் போட்டியிட எடுத்துள்ள முடிவுக்கு, அதன் உறுப்புக் கட்சிகளான ஜோகூர் மாநில மஇகா மற்றும் மசீச (MCA) ஆகிய இரு கட்சிகளும் தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக ஜோகூர் மாநில மஇகா வெளியிட்டுள்ள அறிக்கையில், BN கூட்டணியின் இந்த முடிவு அரசியல் கர்வத்தினால் எடுக்கப்பட்டது அல்ல. மாறாக, மாநில அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை, தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் ஜோகூர் மக்களின் நலனுக்கான தெளிவான தலைமைத்துவத்தை உறுதி செய்வதற்காகவே ஆகும்.

நிர்வாகத்தில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் அல்லது வளர்ச்சிப் பணிகளைப் பாதிக்கும் எந்தவொரு அரசியல் சூழ்ச்சிகளும் ஜோகூர் மாநிலத்திற்குத் தேவையில்லை. ஜோகூர் மாநிலம் என்பது அரசியல் சோதனைக் கூடம் அல்ல; அது உறுதியான தலைமைத்துவத்துடன் தொடர்ந்து முன்னேற வேண்டிய ஒரு மாநிலமாகும். பல ஆண்டுகளாக BN கூட்டணி ஆற்றியுள்ள சேவைகள், அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அதன் உண்மையான போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டே மக்கள் தொடர்ந்து தங்களை மதிப்பிடுவார்கள் என்று மஇகா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அதேநேரம் ஜோகூர் மாநில மசீசவின் துணைத் தலைவரும், மசீச இளைஞர் பிரிவுத் தலைவருமான லிங் தியான் சூன் கூறுகையில், ஜோகூர் BN தலைவர் டத்தோ ஓன் ஹஃபிஸ் காசியின் இந்த அறிவிப்பை “துணிச்சலான மற்றும் துல்லியமான முடிவு” என்று வர்ணித்துள்ளார்.

“2022-ஆம் ஆண்டில் ஜோகூரில் BN கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைத்ததில் இருந்து, ஓன் ஹஃபிஸின் தலைமையின் கீழ் மாநிலம் வலுவான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் ஜோகூர் மாநிலம் RM110 பில்லியன் முதலீட்டை ஈர்த்து சாதனை படைத்துள்ளது. ஓன் ஹஃபிஸின் தலைமையில் ஜோகூர் தொடர்ந்து பெரும் வெற்றிகளைப் பெறும்,” என்று லிங் தியான் சூன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here