கோலாலம்பூர்:
பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் புதிய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் சம்சூரி முக்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் உச்சமன்றக் கூட்டத்தில் இம்முடிவு அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்டதாக அதன் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தகியுத்தீன் ஹசான் தெரிவித்துள்ளார்.
கெமாமான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அஹ்மத் சம்சூரிக்கு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிக் கூட்டணியை வழிநடத்தும் இந்தப் பொறுப்பை ஒப்படைப்பதற்கு உச்சமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் தலைவர்களும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்தனர்.
கூடுதல் பொறுப்பு: தற்போது திரங்காணு மாநில மந்திரி பெசாராகவும் (முதலமைச்சர்) பொறுப்பு வகிக்கும் அஹ்மத் சம்சூரி, இனி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அரசியல் திட்டங்களை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்வார்.
வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் முக்கிய தேசியக் கொள்கை விவாதங்கள் மற்றும் நாடாளுமன்ற விவாதங்களின் போது எதிர்க்கட்சிக் கூட்டணியை அவர் திறம்பட வழிநடத்துவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.




















