PKR கோல சிலாங்கூர் ஆண்டுக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு: நம்பிக்கையில்லா தீர்மானத்தால் தள்ளுமுள்ளு – 3 பெண்கள் காயம்!

கோலாலம்பூர் :

இன்று நடைபெற்ற கோல சிலாங்கூர் பிகேஆர் (PKR) தொகுதி ஆண்டுப் பொதுக்கூட்டத்தில், தொகுதித் தலைவர் எம். சிவபாலனுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம், இறுதியில் அது தள்ளுமுள்ளாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுக்கூட்டம் நிறைவடைந்து சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, திடீரென ஒரு குழுவினர் மீண்டும் மண்டபத்திற்குள் நுழைந்துள்ளனர். கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக, அது குறித்து விவாதிப்பதற்கோ அல்லது வாக்கெடுப்பு நடத்துவதற்கோ ஏன் வாய்ப்பளிக்கப்படவில்லை என்று அக்குழுவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து விளக்கமளித்த தொகுதித் தலைவர் எம்.சிவபாலன், தனக்கு எதிரான அந்தத் தீர்மானத்தை தாம் ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் கட்சியின் விதிமுறைப்படி அது இறுதிப் பரிசீலனைக்காக பிகேஆர் கட்சியின் மத்திய தலைமைத்துவத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று அவர்களிடம் தெளிவுபடுத்தியதாகக் குறிப்பிட்டார்.

இந்த திடீர் தள்ளுமுள்ளு சம்பவத்தின் போது, கட்சியின் பெண் உறுப்பினர்கள் மூன்று பேர் காயமடைந்ததுடன், அவர்களின் கைகளில் வீக்கமும் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே போலீசில் முதற்கட்டப் புகார் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மேலும் ஒரு அதிகாரப்பூர்வப் புகார் சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைமையகத்திலும் பதிவு செய்யப்படவுள்ளதாக சிவபாலன் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து பிகேஆர் கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் புசியா சாலே (Datuk Dr Fuziah Salleh) கருத்துத் தெரிவிக்கையில், கோல சிலாங்கூர் பிகேஆர் தொகுதியில் தள்ளுமுள்ளு சம்பவம் நடந்ததை உறுதிப்படுத்தினார். எனினும், இச்சம்பவம் பொதுக்கூட்டம் முடிந்த பிறகே நடைபெற்றதால், இன்று நடைபெற்ற ஆண்டுப் பொதுக்கூட்டத்தின் செல்லுபடித்தன்மை (Validity) இதனால் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

கட்சியின் உட்கட்சிப் பூசல் காரணமாக ஆண்டுப் பொதுக்கூட்டத்திலேயே உறுப்பினர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அது போலீஸ் புகார் வரை சென்றுள்ளது பிகேஆர் வட்டாரத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.

-NST-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here