கோத்தா பாரு:
கிளாந்தான் மாவட்டத்தில் சுமார் 13 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒரு பெரிய கொள்ளைக் கும்பலை போலீசார் அதிரடியாக முறியடித்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் மூலம் சுமார் RM404,400 மதிப்பிலான இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மே 10 முதல் 13 வரை நடத்தப்பட்ட தொடர் சோதனைகளில், 28 முதல் 36 வயதுக்குட்பட்ட இந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக கிளாந்தான் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமட் (Datuk Mohd Yusoff Mamat) தெரிவித்தார்.
மாநில காவல்துறை தலைமையகத்தில் திங்கட்கிழமை (மே 18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ முகமட் யூசோஃப் மாமட் கூறியதாவது:
கைது செய்யப்பட்ட மூவரும் உள்ளூர்வாசிகள் ஆவர். அவர்களில் ஒருவர் மியான்மர் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், கடந்த 3 முதல் 4 மாதங்களாக இந்த கும்பல் தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளது. பகல் நேரத்தில் ஆள் இல்லாத வெற்று வீடுகளை மட்டுமே இவர்கள் குறிவைத்துள்ளனர் என்றும் கூறினார்.
காலையில் வீட்டின் உரிமையாளர்கள் வேலைக்குச் சென்ற பிறகு, காலை 8 மணி முதல் 9 மணிக்குள் அந்த வீடுகளைக் கண்காணித்து, யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு இவர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இக்கும்பல் முக்கியமாக பெரோல் (Perol) மற்றும் பெரிங்காட் (Peringat) ஆகிய பகுதிகளை இலக்காகக் கொண்டு செயல்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 28 அன்று கம்பங் பெரோலில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து, கார் மற்றும் பொருட்களைத் திருடியதில் சுமார் RM30,000 இழப்பு ஏற்பட்ட வழக்கிலும் இவர்களுக்குத் தொடர்பிருப்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்திய கருவிகள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் (Tablets), கேமராக்கள், நகைகள் மற்றும் கைக்கடிகாரங்கள், ஆடம்பரக் கைப்பைகள் (Handbags) ,ஒரு கார் மற்றும் ரொக்கப் பணம்,பூட்டை உடைக்கப் பயன்படும் கருவிகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டன என்று கூறினார்.





















