மருத்துவமனை கட்ட நிலம் இல்லையா? சிலாங்கூர் மந்திரி பெசாரின் விளக்கத்திற்கு ‘அர்மடா’ கடும் கண்டனம்!

கோலாலம்பூர்:

சிலாங்கூர் மாநிலத்தின் பூச்சோங், பெட்டாலிங் ஜெயா மற்றும் சுபாங் ஜெயா ஆகிய மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் இல்லாததற்கு, ‘பொருத்தமான நிலத்தைக் கண்டறிவதில் நிலவும் தாமதமே காரணம்’ என மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியுள்ள சாக்குப்போக்கிற்குச் சிலாங்கூர் பெர்சத்து இளைஞர் பிரிவு (அர்மடா) தலைவர் நைம் புருண்டேஜ் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மலேசியாவிலேயே மிகச் செல்வாக்கான மற்றும் பணக்கார மாநிலமாகத் திகழும் சிலாங்கூரை கடந்த எட்டு ஆண்டுகளாக நிர்வகித்து வரும் அமிருடின் ஷாரி, மக்களின் மிக அத்தியாவசியமான அடிப்படைச் சுகாதாரத் தேவைக்கான நிலத்தை ஒதுக்கத் தவறியது சிலாங்கூர் மக்களை அப்பட்டமாக அவமதிக்கும் செயல் என அவர் சாடியுள்ளார்.

நைம் புருண்டேஜ் இன்று வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கையில், “அதே பகுதிகளில் தனியார் மருத்துவமனை நிறுவனங்களால் மிகக் குறுகிய காலத்திற்குள் மூன்று பிரம்மாண்ட மருத்துவமனைகளைக் கட்டுவதற்கு நிலம் பெற முடிகிறது. ஆனால், ஒட்டுமொத்த மாநில அதிகாரமும், நிர்வாகமும் கையில் இருக்கும் சிலாங்கூர் அரசாங்கத்தால் ஏன் ஒரு அரசு மருத்துவமனை கட்ட நிலம் ஒதுக்க முடியவில்லை?” என நைம் புருண்டேஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மந்திரி பெசாருக்கு உள்ள சட்ட அதிகாரங்களைச் சுட்டிக்காட்டிய நைம், “1960-ஆம் ஆண்டு நிலக் கையகப்படுத்துதல் சட்டத்தின் (Land Acquisition Act 1960) கீழ், பொது நலனுக்காகவும் மக்கள் பயன்பாட்டிற்காகவும் எந்தவொரு தனியார் நிலத்தையும் கையகப்படுத்தும் உச்சக்கட்ட அதிகாரம் மந்திரி பெசாருக்கு உண்டு. இந்த சட்டப்பூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தத் தவறியது அவரது நிர்வாகத் திறமையின்மையையும், அரசியல் துணிவின்மையையுமே காட்டுகிறது,” எனத் தனது அறிக்கையில் கடுமையாகச் சாடியுள்ளார்.

மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருத்து வரும் நிலையில், இந்த மூன்று முக்கியப் பகுதிகளில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களின் மருத்துவத் தேவைகளுக்காகப் பல கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் அவல நிலைக்கு மாநில அரசின் இந்த மெத்தனப் போக்கே காரணம் என்றும் அர்மடா பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here