சினிமா பாணியில் நடவடிக்கை: நடனக் கலைஞர்களாக மாறுவேடமிட்டு போதைப்பொருள் கடத்தல்காரனை அள்ளிய தாய்லாந்து போலீசார்!

லாப் புரி (தாய்லாந்து):

தாய்லாந்தின் ‘தா லுவாங்’ (Tha Luang) மாவட்டத்தில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட நெட்வொர்க்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி ஒருவரைப் பிடிக்க, போலீசார் நடனக் கலைஞர்களைப் போல மாறுவேடமிட்டு (Undercover Dancers) நடத்திய சினிமா பாணி அதிரடி வேட்டை உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

‘தி தைகர்’ (The Thaiger) செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள விபரங்களின்படி, ‘மேகா ஃபா-வாப்-வாப்’ (Mekha Fa-wap-wap) என்று அடையாளம் காணப்பட்ட அந்தச் சந்தேக நபரை நீண்ட நாட்களாகப் போலீசார் கண்காணித்து வந்தனர்.

இறுதியாக, அவர் இருக்கும் பகுதியைச் சுற்றி நடந்த ஒரு நிகழ்வில், போலீசார் வண்ணமயமான பாரம்பரிய நடனக் கலைஞர் ஆடைகளை அணிந்து, கூட்டத்தோடு கூட்டமாக நடனமாடிக் கொண்டே தங்களின் அடையாளத்தை மறைத்து வலம் வந்தனர். சரியான நேரம் பார்த்து, அந்த நபரால் தப்பி ஓட முடியாதபடி அனைவரும் சூழ்ந்து கொண்டு அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 53 மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) மாத்திரைகள் (யபா எனப்படும் போதை மாத்திரைகள்), போதைப்பொருட்களைப் பிரித்து விநியோகம் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் 200-க்கும் மேற்பட்ட சிறிய பிளாஸ்டிக் பைகள், சட்டவிரோத ஆன்லைன் ஸ்லாட் மெஷின் (Slot Machine) சூதாட்ட நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு மொபைல் போன் ஆகிய ஆதாரங்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தற்போது அந்த நபர், விற்பனை செய்யும் நோக்கில் போதைப்பொருட்களைப் கைவசம் வைத்திருந்ததற்காவும், அரசாங்கத்தின் அனுமதியின்றி சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டத் தளத்தை நடத்தியதற்காகவும் பல்வேறு கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டு, இந்த நெட்வொர்க்கின் பின்னணியில் உள்ள மற்ற நபர்களைக் கண்டறியப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here