காஜாங்:
குடிநுழைவுத் துறையில் ஒழுக்கக்குறைவு மற்றும் நேர்மையற்ற செயல்களில் ஈடுபட்டதாக 2022ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 77 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்த ஆண்டு மட்டும் 8 அதிகாரிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குடிநுழைவுத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ஜகாரியா ஷாபான் (Datuk Zakaria Shaaban) கூறுகையில், கடந்த 2022 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 971 ஒழுங்குமுறை வழக்குகள் தீர்க்கப்பட்டு, தவறிழைத்த அதிகாரிகள் மீது பணிநீக்கம் உள்ளிட்ட பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும், இந்த ஆண்டில் இதுவரை 23 ஒழுங்குமுறை வழக்குகள் முழுமையாக விசாரணை செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





















