கோலாலம்பூர்:
கோலா பிலா, ஸ்ரீ மெனாந்தி அருகேயுள்ள கம்போங் தஞ்சோங் பாச்சாங் சாலையில் நேற்றிரவு கட்டுப்பாட்டை இழந்த பெரோடுவா ஆக்சியா ரக கார் ஒன்று, சாலையோரக் குன்றின் அடிவாரத்தில் இருந்த ஒரு வீட்டின் கூரை மீது தலைகீழாகப் பாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இரவு 7.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தின் போது, காரில் பயணித்த 63 வயது ஓட்டுநரும் மற்றொரு பயணியும் எவ்வித காயமுமின்றி தப்பிய வேளையில், முன்னிருக்கை மற்றும் பின்னிருக்கையில் இருந்த இரு பயணிகள் லேசான காயங்களுடன் துங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கோலா பிலா மாவட்டப் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டண்ட் முகமட் முஸ்தபா ஹுசின் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ மெனாந்தியிலிருந்து சிரம்பான் நோக்கிச் சென்றபோது நிகழ்ந்த இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், போக்குவரத்து விதிகள் 1959-ன் கீழ் போலீசார் மேல் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.



















