கோலாலம்பூர்:
மலேசியாவின் கெடா மற்றும் ஜோகூர் மாநிலங்களின் சில குறிப்பிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) இன்று காலை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று காலை 8.55 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அதிகாரப்பூர்வ எச்சரிக்கையின்படி, கெடாவின் லங்காவி (Langkawi) தீவுப் பகுதி, ஜோகூரின் பொந்தியான் (Pontian), கூலாய் (Kulai) மற்றும் ஜோகூர் பாரு (Johor Bahru) ஆகிய மாவட்டங்கள் இந்த வானிலையை எதிர்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளது.
வானிலை மையத்தின் அறிவிப்பின்படி, இந்த மோசமான வானிலை மற்றும் இடியுடன் கூடிய கனமழை இன்று மதியம் 1.00 மணி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் (20 mm) அதிகமான அளவில் அதிதீவிர மழைப்பொழிவு பதிவாகியிருப்பதோ அல்லது தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாலோ இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டதில் இருந்து 6 மணி நேரம் வரை செல்லுபடியாகும்.
மோசமான வானிலை நீடிக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்கள் முடிந்தவரை தங்களின் வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும், திறந்தவெளி மைதானங்கள் அல்லது வெட்டவெளிகளுக்குச் செல்வதைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும், தாழ்வான பகுதிகள் மற்றும் வெள்ள அபாயம் உள்ள இடங்களுக்கு (Flood-prone areas) அருகில் செல்வதையோ அல்லது வாகனங்களை நிறுத்துவதையோ தவிர்க்க வேண்டும் மற்றும் வானிலை சீராகும் வரை பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு MetMalaysia அறிவுறுத்தியுள்ளது.





















