கோலாலம்பூர்:
மலேசியாவுக்கான கடற்படை தாக்குதல் ஏவுகணை (Naval Strike Missile – NSM) ஏற்றுமதி உரிமத்தை ரத்து செய்ததற்காக நார்வே நாடு மன்னிப்பு கோரியுள்ளது. எனினும், அந்த ரத்து முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்பதில் நார்வே உறுதியாக நின்றுள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் ‘ஷாங்ரி-லா கலந்துரையாடல்’ (Shangri-La Dialogue) மாநாட்டின் இடையே, மலேசிய பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது காலிட் நோர்டின் மற்றும் நார்வே பாதுகாப்பு அமைச்சர் டோரே ஓ. சான்ட்விக் இடையிலான இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின் போதே நார்வே தரப்பில் இந்த மன்னிப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய பாதுகாப்பு அமைச்சர் காலிட் நோர்டின், நார்வேயின் இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்கு மலேசியாவின் கடுமையான ஏமாற்றத்தையும் கண்டனத்தையும் நேரடியாகத் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
“நார்வே பாதுகாப்பு அமைச்சர் தனது மன்னிப்பைத் தெரிவித்துக்கொண்டதோடு, இந்த ரத்து நடவடிக்கைக்கான காரணத்தையும் விளக்கினார். ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக இருந்து வரும் நல்லுறவுக்கு நார்வேயின் இந்த அணுகுமுறை உகந்தது அல்ல என்பதை நான் அவரிடம் மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் கூறிவிட்டேன்,” என்று காலிட் நோர்டின் தெரிவித்தார்.
மலேசிய அரசக் கடற்படையின் கடலோர போர்க்கப்பல் (LCS) திட்டம் மற்றும் ‘லெகியு’ ரக போர்க்கப்பல்களை நவீனப்படுத்தும் திட்டங்களுக்காக இந்த ஏவுகணைகள் வாங்கப்படவிருந்தன. ஆனாலும் கடந்த 2018 ஒப்பந்தம் கையெழுத்தானது, அதேநேரம் ஏவுகணைகள் விநியோகம் செய்யப்பட வேண்டிய ஆண்டு: 2026 (இந்த ஆண்டு மார்ச் மாதம்) ஆனால் கடந்த மார்ச் மாதம் ஏவுகணைகள் கைக்கு வர வேண்டிய நேரத்தில், அதில் சிக்கல் இருப்பதாக மட்டுமே கூறப்பட்டது.
ஏற்றுமதி உரிமம் ரத்து செய்யப்பட்டது குறித்து கடந்த ஏப்ரல் மாதமே மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.
இவ்வளவு நீண்ட காலத்திற்குப் பிறகு, மிகக் குறுகிய கால அவகாசத்தில் இந்த முடிவை அறிவித்தது ஒரு சிறந்த நட்பு நாட்டிற்கு அழகல்ல என்று மலேசியா சாடியுள்ளது.
நார்வேயின் இந்த முடிவினால் மலேசியாவிற்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்புகளை ஈடுகட்ட நார்வே அரசு முன்வர வேண்டும் என காலித் நோர்டின் வலியுறுத்தியுள்ளார்.




















