கோலாலம்பூர்:
பேராக், தாப்பாவில் உள்ள கூனோங் பத்து பூத்தே மலையில் கடந்த மே 24-ஆம் தேதி மாயமான 49 வயது மலையேற்ற வீராங்கனை ஜாஸ்லிண்டா சலுடினைத் தேடும் அதிகாரப்பூர்வ நடவடிக்கை முடிவுக்கு வந்தபோதிலும், தங்களால் இயன்றவரை தேடுதலைத் தொடரப்போவதாக ஓராங் அஸ்லி தன்னார்வலர்கள் உறுதியளித்துள்ளனர்.
பேராக் மாநில மந்திரி பெசாரின் ஓராங் அஸ்லி விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி சியூ ஹோ பெங் கூறுகையில், 22 செமாய் (Semai) பழங்குடியின தன்னார்வலர்கள் தங்களின் அனுபவம் மற்றும் சில தடயங்களின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பெண் இன்னும் கூனோங் பத்து பூத்தே பகுதியில்தான் இருக்கக்கூடும் என நம்புவதாகத் தெரிவித்தார்.
டிரான்ஸ் ஸ்பென்சர் சேப்மேன் (Trans Spencer Chapman) பயணத்தில் பங்கேற்ற ஜாஸ்லிண்டா, உடல்நலக் குறைவால் மலையேற்றத்தை நிறுத்திய பின்னர், மே 24 அன்று இறுதியாகக் காணப்பட்டார்.
இச்சம்பவம் குறித்துப் பேசிய சியூ, விபத்துகளைத் தவிர்க்க மலையேற்றப் பிரியர்கள் சூரிய உதயத்திற்குப் பிறகே காட்டுக்குள் செல்ல வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் மக்களின் மரபுகளை மதித்து குப்பைகளை வீசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.




















