கோலாலம்பூர்:
நாட்டின் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாரான டத்தோ ஈசா சமாட்டிற்கு வழங்கப்பட்டிருந்த உயரிய ‘டான் ஸ்ரீ’ (Tan Sri) விருதைத் திரும்பப் பெற்று உத்தியோகபூர்வமாக ரத்து செய்துள்ளார்.
சரவாக், கூச்சிங்கில் உள்ள மெர்டேகா பேலஸ் ஹோட்டல் & சூட்ஸ் விவகாரத்தில், ஃபெல்டா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் (FIC) கொள்முதல் தொடர்பான 3 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட ஒன்பது ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
77 வயதான ஈசா சமாட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தை நாட்டின் கூட்டரசு நீதிமன்றம் (Federal Court) மீண்டும் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சுங்கை பூலோ சிறையில் தனது சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





















