கோலாலம்பூர்:
ஜோகூர், பொந்தியான் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் நேற்று காலை மாணவி ஒருவர் உயரத்தில் இருந்து விழுந்து காயமடைந்த சம்பவத்தில், முதற்கட்ட விசாரணையின்படி சக மாணவர்களால் பகடிவதை செய்யப்பட்டதற்கோ (Bullying) அல்லது இதர குற்றவியல் நடவடிக்கைகளுக்கோ எவ்வித ஆதாரமும் இல்லை என்று மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்பிரிடெண்டண்ட் ஹட்ராட் ஹுசேன் மியோன் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துப் பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ள வேளையில், விபத்து நடந்த உடனே பள்ளித் தரப்பில் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சுயநினைவுடன் இருந்த அந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று பள்ளி நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி ‘சின் சியூ டெய்லி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பள்ளியின் வாரிய உறுப்பினர்களும் ஆசிரியர்களும் மருத்துவமனையில் மாணவியின் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளையும் ஆதரவையும் வழங்கி வரும் அதே வேளையில், இந்த விபத்தினால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலைக் குறைக்க மற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பள்ளியில் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், அதிகாரப்பூர்வ விசாரணை முடிவடையும் வரை இச்சம்பவம் குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ள பள்ளி நிர்வாகம், பள்ளியின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.




















