துரத்தும் துயரம்.. 4,000 பேர் பலியான ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,000 ஐ தாண்டி இருக்கும் நிலையில் இன்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியான ஹெராட்டில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. அதன் தொடர்ச்சியாக அங்கு 5 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.6 முதல் 6.3 வரை ரிக்டர் அளவுகோலில் அந்த நிலநடுக்கங்கள் பதிவாகி இருக்கின்றன. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

ஏராளமான பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்து இருக்கின்றனர். நிலநடுக்கம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தில் சிக்கியவர்களின் உடல்களை மீட்பதில் தொடர்ந்து சிரமம் ஏற்பட்டு வருகிறது. 5 நாட்களாக நடைபெற்று வரும் மீட்புப் பணியில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000-ஐ தாண்டி உள்ளது. இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து உள்ளதாகவும், மீட்கப்பட்ட பலர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கின்றன.

4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கின்றனர் என்றும் சுமார் 10 ஆயிரம் பேர் இதில் காயமடைந்து உள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் காரணமாக 1,320 வீடுகள் சேதமடைந்தும், இடிந்தும் இருப்பதாக ஆப்கானிஸ்தானின் பேரிடர் மீட்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜன்னன் சயீக் தெரிவித்து உள்ளார். இந்த துயரம் தீர்வதற்குள் ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 6.11 மணியளவில் ஏற்கனவே நிலநடுக்கம் ஏற்பட்ட ஹெராட் பகுதியில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here