ஜோகூர் மாநிலத் தேர்தலில் 4 தொகுதிகளில் களம் காணும் மஇகா! தொகுதிப் பங்கீடு குறித்து டத்தோ டி. முருகையா அதிரடி அறிவிப்பு!

கோலாலம்பூர்:

வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாகக் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ டி. முருகையா அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

பாரிசான் நேஷனல் (BN) கூட்டணியின் உறுப்புக் கட்சிகளுடன், ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்கள் குறித்து மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் நடத்திய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இம்முடிவு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று கோலாலம்பூரில் உள்ள மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் 80-ஆவது ஆண்டு நிறைவு விழாக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ டி. முருகையா:”தற்போதைய நிலவரப்படி, ஜோகூர் மாநிலத்தில் மஇகா 4 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தலைவர் தெரிவித்துள்ளார். அதேவேளையில், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மஇகா போட்டியிடவிருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தற்போது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன” என்றார்.

கட்சியின் தேர்தல் இயந்திரத்தை வலுப்படுத்தும் நோக்கில், வரும் வார இறுதியில் ஜொஹார் பாருவில் சுமார் 150 பேச்சாளர்களுக்கான இரண்டு நாள் சிறப்புப் பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது. இப்பேச்சாளர்கள் ஜோகூர் மாநிலத்தின் மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள இந்திய வாக்காளர்களைக் கவர்ந்து, பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு ஆதரவைத் திரட்டும் நோக்கில் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற 15-ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தலில், மஇகா போட்டியிட்ட 4 இடங்களில் கெமெலா (Kemelah), கஹாங் (Kahang), தெங்காரோ (Tenggaroh) ஆகிய 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது; புக்கிட் பத்து (Bukit Batu) தொகுதியில் மட்டும் தோல்வியடைந்தது.

நம்பகமான கட்சி வட்டாரங்களின்படி, இந்தத் தேர்தலில் மஇகா தனது பாரம்பரியத் தொகுதியான தெங்காரோவை அம்னோவுடன் (Umno) கைமாற்றிவிட்டு, அதற்குப் பதிலாக பெர்லிங் (Perling) தொகுதியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி மஇகா இம்முறை கெமெலா, கஹாங், புக்கிட் பத்து மற்றும் பெர்லிங் ஆகிய தொகுதிகளில் களம் இறங்கலாம். மேலும், இம்முறை 50 விழுக்காடு புதிய முகங்களுக்கு (New Faces) வாய்ப்பளிக்கப்படவுள்ளதாகவும், நெகிரி செம்பிலானில் மஇகா 2 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் ஆணையத்தின் (EC) அறிவிப்புப்படி, ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 27-ஆம் தேதியும், வாக்குப்பதிவு ஜூலை 11-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு ஜூலை 18-இல் வேட்புமனுத் தாக்கலும், ஆகஸ்ட் 1-இல் வாக்குப்பதிவும் நடைபெறும்.

இதற்கிடையில், மஇகாவின் 80-ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, இந்த சனிக்கிழமை நாடு முழுவதும் 152 பகுதிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளதாகவும், இதில் கால்பந்து, பேட்மிண்டன், பௌலிங், கேரம் மற்றும் நடைப்பயணம் (Hiking) உள்ளிட்ட போட்டிகள் இடம் பெறவுள்ளதால் அனைத்து இன மக்களும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் முருகையா அழைப்பு விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here