பினாங்கு தன் அப்பன் வீட்டுச் சொத்துப்போல் ஒருவர் சொந்தம் கொண்டாடுகிறார் – சத்தீஸ் முனியாண்டி சாடல்

செ. குணாளன்

பட்டர்வொர்த், ஜூலை  27-

பினாங்கு மாநிலத்தை தன் அப்பன் வீட்டுச் சொத்துப்போல் ஒரு குறிப்பிட்ட நபர் சொந்தம்  கொண்டாடுகிறார் என பாகான் டாலாம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி சாடினார்.

அதிலும் சட்டமன்றத் தேர்தலுக்கான ஜசெக வேட்பாளர் பட்டியலை நிர்ணயம் செய்வதில் அந்தக் குறிப்பிட்ட நபருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாநில ஜசெகவின் ஒருமித்த முடிவு இது இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக இது ஒரு தனிநபர் சார்ந்த முடிவு என்றும்  தன்னுடைய மக்கள் சந்திப்பு மையத்தில் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சத்தீஸ் முனியாண்டி  விவரித்தார்.

பினாங்கு மாநில முதலமைச்சர் சௌ கொன் இயோவிற்கு நான் முழுமையான ஆதரவைத் தருகிறேன் என்று கூறிய ஒரே காரணத்திற்காக எனக்குத் தொகுதி மறுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் பினாங்கு முதல்வருக்கு ஆதரவு வழங்கிய 7 சட்டமன்ற உறுப்பினர்களில் 6 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது இது தனிப்பட அரசியல் பகைமையை ஜனநாயக கட்சியில் திணிப்பதாகும் என்று சத்தீஸ் கூறினார்.

கடந்த 5 ஆண்டுகள் பினாங்கு சட்டமன்றத்தில் அனைத்து சட்டவரைவு தீர்மானங்களில் விவாதம் புரிந்திருக்கிறேன், பொது கணக்காய்வாளர் குழுவில் இணைத்து மாநில நன்மைகளுக்குச் சேவையாற்றி வந்துள்ளேன். மாநிலப் பிரச்சினைகள் உட்பட தேசிய பிரச்சினைகளில் என் குரல் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருந்ததுண்டு. அரசியல் தலைவர்களுக்குச் சாமரம் வீசும் போக்கை நான் கடைப்பிடித்ததில்லை. சுயமரியாதை சிந்தனையுடன் நான் அரசியல் செய்திருக்கிறேன். என் தொகுதியில்கூட நிறைவான சேவைகளை முன்வைத்துள்ளேன் என்பதை என் அரசியல் பதிவைப் பார்த்தால் தெரியும்.

இந்நிலையில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் கூறிய காரணம் பொருத்தமற்றதாக உள்ளது. நான் வெறுமையின் காரணமாகப் பேசுவதாகக்கூடச் சொல்லலாம். ஆனால் நான் மிகவும் சிந்தித்து நிதானமாகத்தான் பேசுகிறேன் என்றார் அவர். கட்சியை விமர்சித்து இப்படிப் பேசுகின்றீர்களே என்று செய்தியாளர் கேட்டதற்கு இது ஜனநாயக நாடு, கட்சியின் பெயர்கூட ஜனநாயகக் கட்சி. இந்த நிலையில் அவர்கள் நடவடிக்கை எடுத்தாலும் நான் உரிமைக்காகப் பேசுவேன் என்று கூறினார்.

இதற்கிடையே கட்சி உங்களுக்குத் தொகுதி வழங்கவில்லை என்பதற்காக நீங்கள் தனித்துத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது எனக்கு இன்னும் தெரியவில்லை. குறுகிய காலத்தில் அது குறித்து அறிவிப்பு செய்வேன் என்று சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும்  பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஆணையருமான சத்தீஸ் முனியாண்டி தனது செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here