அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் இருந்து விலகிய விவேக் ராமசாமி.. டிரம்பிற்கு ஆதரவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். இதற்கு என்ன காரணம்.. அங்கே என்ன நடந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம். அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கே அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வே சுவாரசியமாக இருக்கும். அங்குப் பிரதானமாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி என இரு கட்சிகள் மட்டுமே இருக்கிறது.

இதனால் இரு கட்சிகள் சார்பிலும் போட்டியிடப் பலரும் விருப்பம் தெரிவிப்பார்கள். அவர்களுக்கு இடையே உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு யாருக்குக் கட்சியில் செல்வாக்கு அதிகமாக இருக்கிறதோ.. அவர்கள் போட்டியிடுவார்கள். மேலும், அங்கே ஒருவரால் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும்.

அதன்படி இப்போது ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபராக இருக்கும் பைடன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அதேநேரம் இப்போது எதிர்க்கட்சியாக உள்ள குடியரசு கட்சி சார்பில் பலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்களில் டிரம்ப் முன்னிலையில் இருந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமிக்கும் ஆதரவு அதிகமாக இருந்தது.

இருவருக்கும் இடையே நல்ல போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ரேஸில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். அங்கே ஐயோவா மாகாணத்தில் அதிபர் வேட்பாளரைத் தேர்வு செய்ய உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. முக்கியமான உட்கட்சி தேர்தல் என்பதால் பலரது கவனமும் இதன் மீது திரும்பி இருந்தது.

இந்தத் தேர்தலில் டிரம்பிற்கு தான் ஆதரவு அதிகமாக இருந்தது. விவேக் ராமசாமி இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்தார். இந்தச் சூழலில் தான் அதிபர் ரேஸில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவு தருவதாகவும் அறிவித்துள்ளார்.

விவேக் ராமசாமி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். அந்த அறிவிப்பை வெளியிடும் போது, அவரை பற்றி குடியரசு கட்சியிலேயே பலருக்கும் தெரியாது. இருப்பினும், அவரது பிரச்சாரமும் அவரது அணுகுமுறையும் அவருக்கான செல்வாக்கை அதிகரித்தது. குறிப்பாக அவர் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். மேலும், அமெரிக்காவுக்கே முன்னுரிமை தருவேன் என்றார்.

இந்தப் பிரச்சாரம் அப்படியே டிரம்பின் ஸ்டைல் தான். கருத்துகள் மட்டுமின்றி தனது பிரச்சார அணுகுமுறையையும் விவேக் ராமசாமி டிரம்ப் போலவே கையாண்டார். முந்தைய தேர்தல்களில் ட்ரம்பை வெற்றிபெறச் செய்த பழமைவாதிகள் தனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று விவேக் ராமசாமி நம்பினார். ஓரளவுக்கு பழமைவாதிகள் ஆதரவு விவேக் ராமசாமிக்கு கிடைத்த போதிலும், டிரம்ப் களத்தில் இருந்ததால் ராமசாமிக்கு பெரியளவில் செல்வாக்கு அதிகரிக்கவில்லை.

விவேக் ராமசாமி அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் வசித்து வருகிறார். இருப்பினும், அவரது பெற்றோர் கேரளாவில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர்கள். இந்திய அமெரிக்கர்கள் மத்தியில் அவருக்கான ஆதரவு அதிகமாகவே இருந்தது. அவர் டிரம்ப் ஸ்டைலை பின்பற்றும் நிலையில், டிரம்ப் சமீபத்தில் அவரை மிக மோசமாகச் சாடியிருந்தார்.

விவேக் ராமசாமியை மோசடி பேர்வழி எனக் குறிப்பிட்ட அவர், இந்திய அமெரிக்கர் ஒருவருக்கு நீங்கள் வாக்களித்தால்.. அது அமெரிக்காவுக்கு வாக்களிப்பது இல்லை என்பது போலக் கூறியிருந்தார். டிரம்பின் இந்தப் பேச்சு குடியரசு கட்சியில் பேசுபொருளானது. விவேக் ராமசாமி இந்த உட்கட்சி தேர்தலில் 4ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here